தமிழ்நாடு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.17.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ”தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து வரும் 1.14 லட்சம் பணியாளர்களால், தினமும் 20,111 பேருந்துகள் வரை தமிழ்நாடு முழுவதும், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் மக்களின் போக்குவரத்திற்காக இயக்கப்பட்டு 1.70 கோடி பயணிகள் தினமும் பயன் பெறுகின்றனர்.
கொரோனா பெருந்துயர் காலமான 2020, 2021 ஆம் ஆண்டுகளில் மக்களின் உயிர்காக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட முழு அடைப்பின்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் அத்தியாவசியான பேருந்து சேவைகளுக்காக, பேருந்துகளை இயக்கின. அப்போது. போக்குவரத்துப் பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணிபுரிந்தனர். அவ்வாறு பணிபுரிந்த தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.17.15 கோடி வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.







