அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ. 1,000 வழங்கும் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்று கலை, அறிவியல் கல்லூரிகள்,…

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்று கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், பாலிடெக்னிக் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவியரின் விவரங்களை இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் என்று உயர்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. உதவித்தொகை பெறும் மாணவிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

புதுமைப்பெண் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தை செப்டம்பர் 5-ம் தேதி (இன்று) ஆசிரியர் தினத்தன்று, சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகளும் தொடங்கி வைக்கப்பட்டவுள்ளன. இந்நிகழ்வில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.

உயர்கல்வி உறுதித் திட்டத்தில் மாதம் ரூ. 1,000 பெற 90 ஆயிரம் மாணவிகள் தேர்வாகியுள்ளதாகவும், முதற்கட்டமாக சுமார் 1 லட்சம் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.