“ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் கட்டாயம்” – ரிசர்வ் வங்கி உத்தரவு!

ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200 நோட்டு கட்டாயம் இருக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அதிகளவில் செயல்படுகின்றன. அந்த வகையில் பெரும்பாலான வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.500 நோட்டு மட்டுமே அதிகளவில் இருக்கும். இதனால் ரூ.100, ரூ.200 நோட்டு எடுக்க முடியாமல் ஏழை எளியோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு அதிகளவில் புகார்கள் சென்றன. இந்த நிலையில் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கை அனுப்ப பட்டுள்ளது. அதில்,

“அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் ஆபரேட்டர்கள் தங்களது ஏ.டி.எம்.கள் வழியாக ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வைத்து இருக்க வேண்டும். வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களிலும் 75 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை கட்டாயம் வினியோகிக்க வேண்டும். அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களில் 90 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வினியோகிக்க வேண்டும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது உள்ள ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000 என நான்கு வித நோட்டுகளை வைக்கும் அளவுக்கு 4 கேசெட்கள் உள்ளன. அதில் 2 ஆயிரம் ரூபாய் புழக்கத்தில் இல்லை. அதேபோல் ரூ.100, ரூ.200 கேசெட்டில், அந்த ரூபாய் நோட்டுகளை வைப்பதில்லை. முழுவதுமாக ரூ.500 நோட்டுகள் மட்டுமே வைக்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரிசர்வ வங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.