திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஓணான் குட்டை பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் குழுவாக, மினி வேனில் மைசூருக்கு சுற்றுலா சென்றனர். நேற்றிரவு பயணத்தை முடித்துக்கொண்டு சுற்றுலா பயணிகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நாட்றம்பள்ளியை அடுத்த தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் அவர்களது வேன் பழுதாகி நின்றுவிட்டது.
இதையடுத்து அதிலிருந்த சுற்றுலா பயணிகள், நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியனில் உள்ள புல் தரையில் அமர்ந்திருந்தாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த ஈச்சர் லாரி, பழுதாகி நின்ற வேன் மீது மோதியது. இதில், பேருந்து கவிழ்ந்ததில், 7 பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த 8 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வாய்த்த போலீசார் இந்த கோர விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையிலேயே நடைபெற்ற இந்த விபத்து விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







