”ஜி-20 மாநாட்டில் உக்ரைன் பிரகடனம் மீது கருத்தொற்றுமை ஏற்படுத்தியது மைல்கல்” – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு.!

ஜி-20 மாநாட்டில் உக்ரைன் பிரகடனம் மீது கருத்தொற்றுமை ஏற்படுத்தியது மைல்கல் என  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.   சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பாக திகழும் ஜி20 கூட்டமைப்பின் மாநாடு…

ஜி-20 மாநாட்டில் உக்ரைன் பிரகடனம் மீது கருத்தொற்றுமை ஏற்படுத்தியது மைல்கல் என  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பாக திகழும் ஜி20 கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன், பிரேசில் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்திற்கு வருகை தந்த உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். மாநாட்டு அரங்கில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன், இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என பொறிக்கப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த மாநாட்டில், ஆப்பிரிக்க யூனியன் 21-வது உறுப்பு நாடாக ஜி20 கூட்டமைப்பில் இணைந்தது. இதன்மூலம் ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. ஜி20 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி’ என்ற தலைப்பில் பேசிய பிரதமர் மோடி, எத்தனால் கலப்பதை 20 சதவீதம் வரை அதிகரிக்க, உலக அளவில் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்பதே இந்தியாவின் முன்மொழிவு என்றும், இதற்காக உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

எரிபொருள் கலப்பு விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவை என்று பிரதமர் தெரிவித்தார். இந்த முயற்சியில் ஜி20 நாடுகள் இணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை கண்காணிப்புக்கான ஜி20 செயற்கைக்கோள் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

ஜி20 மாநாட்டில், பெண்கள் முன்னேற்றத்திற்காக புதிய செயற்குழு அமைக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரவும், அதன்படி, பாலின இடைவெளியை குறைத்து சமமான வாய்ப்புகளை வழங்கி பெண்களை ஊக்குவிக்கவும் வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுதலை 2030-க்குள் 43 சதவீதம் அளவுக்கு குறைக்க கவனம் செலுத்த வேண்டும் என்றும், அணு ஆயுதம் பயன்படுத்துவதையோ, அணு ஆயுத தாக்குதல் தொடர்பாக மிரட்டுவதையோ ஏற்க முடியாது என ஜி-20 மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை தயாரித்துள்ளதாக அறிவித்த வடகொரியாவுக்கு ஜி-20 நாடுகள் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சந்திரயான்-3 திட்ட வெற்றிக்காகவும் உறுப்பு நாடுகள் சார்பில் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டன. சர்வதேச நிதி அமைப்புகளை சீரமைக்க ஜி20 கூட்டமைப்பின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஜி20 மாநாடு தீர்மானம் தொடர்பாக இந்திய சார்பில் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர், ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்தை பகிர்ந்து கொள்வோம் என்பதே ஜி 20 மாநாட்டின் தகவல் என்றார். இந்தியா தலைமையின் கீழ் ஆப்பிரிக்க யூனியன் ஜி 20 அமைப்பின் நிரந்தர உறுப்பினரானது திருப்தியளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜி 20 மாநாட்டின் இரண்டாவது நாளில் ஜி 20 நாடுகளின் தலைவர்கள், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். சாரல் மழைக்கு நடுவே டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு ஜி20 நாடுகளின் தலைவர்கள் வருகை தந்தனர். அவர்களை பிரதமர் மோடி சால்வை அணிவித்து வரவேற்றார்.

அதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்ட தலைவர்கள் ஒரே நேரத்தில் மலர் வளையம் வைத்து மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினர்.

ஜி 20 மாநாடு தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது..

 

”வரலாற்று சிறப்பு மிக்க ஜி-20 மாநாடு நிறைவடைந்துள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமை, உலக அரங்கில் இந்தியாவின் தலைமைக்கு அழியாத முத்திரையை பெற்று தந்துள்ளது. உக்ரைன் போர் தொடர்பான பிரகடனத்துக்கு கருத்தொற்றுமை ஏற்படுத்தியது, உலக அளவில் நம்பிக்கையை உருவாக்குவதில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லாகும். மேலும் நாடுகளை ஒன்று திரட்டக்கூடிய இந்தியாவின் திறமையை காட்டுவதாகவும் இந்த மாநாடு அமைந்தது” என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.