கர்நாடக மாநிலத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின்
காவிரி கரையோர பகுதிகள் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த
மழையின் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி
வருகிறது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணைக்கு வரும் நீரை கர்நாடகா,
காவிரி ஆற்றில் திறந்து விட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு வரும் காவிரி
நீரின் அளவு நேற்று முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை
நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 8000 கனஅடியாக இருந்தது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து
22 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. பிற்பகல் நிலவரப்படி 35 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் அருவியில்
குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று தடை
விதித்து உத்தரவிட்டிருந்தார். காவிரி கரையோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து
வருவதால் ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. ஒகேனக்கல் மெயின் அருவி சினி அருவி உள்ளிட்ட
பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது







