சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

இந்திய டெஸ்ட் அணியின் வீரர் அஜிங்க்யா ரஹானே, தனது ஓய்வை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக இதுவே சரியான நேரம் என்று நான் உணர்கிறேன். எனவே, அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்” என்று பதிவிட்டுள்ளர்.

2020-21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியை வழிநடத்திய அஜின்கியா ரஹானே, மெல்போர்ன் டெஸ்டில் அபாரமாக சதமடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ரஹானே இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடி 8,000-க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,077 ரன்கள், 12 சதங்கள் அடித்துள்ளார்.

2015 உலகக் கோப்பை அரையிறுதி மற்றும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் சென்ற இந்திய அணியின் முக்கிய வீரராகச் செயல்பட்டார். இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதற்காக ரஞ்சி கோப்பையில் இரு பருவங்கள் கடுமையாக உழைத்த போதிலும், அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாததைத் தொடர்ந்து தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.