பாமக நிறுவனர் ராமதாஸ் வளர்த்த கடா என் மார்பில் பாய்ந்துவிட்டது, தாய் மீது பாட்டில் வீச்சு, பாஜக உடனான கூட்டணி வற்புறுத்தல், என கடுமையாக அண்மையில் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸை சாடினார். இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் தனது தலைமையில் சென்னை பனையூரில் பாமக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தை இன்று(மே.30) நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது, “இது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு. பாமகவின் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நான் என்று சொல்ல மாட்டேன் நாம் என்றுதான் சொல்லுவேன். இங்கு கூடியிருக்கும் நீங்கள்தான் பாமக. நீங்க இல்லையென்றால் கட்சி கிடையாது. இது யாரு சொத்தும் கிடையாது. பாமக என்பது நீங்கதான். பொதுக்குழுவில் முறையாக நீங்கள்தான் என்னை தேர்வு செய்தீர்கள்.
உங்களுடன் சேர்ந்து அடிமட்ட தொண்டனாக நான் செயல்படுவேன். பொறுப்புகள் வரும் போகும். ஆனால் நிரந்தரம் உங்கள் அன்பும் பாசமும்தான். அதனால் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து நம் கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும். நம்முணைய இணமான காவலர் சமூக நீதிப் போராளி ராமதாஸ் நம் கட்சியை தொடங்கினார். அவருடைய கொள்கைகளான சமூகநீதி, சமத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றை நாம் மனதில் நிறுத்தி நாம் களத்தில் வேகமாக இறங்குவோம். அதில் உங்களில் ஒருவனாக முதல் தொண்டனாக சேர்ந்து நான் இறங்குவேன்.
நம் கட்சியைப்போல் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் கிடையாது. அந்தளவு கொள்கை, கோட்பாடுகள், செயல்பாடுகள் உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் நம் இலக்கு. அதை நாம் அடைவதற்கு நமக்குள் வேற்றுமைகள் இருக்க கூடாது. அதன் அடிப்படையில் புதிய இளம் உறுப்பினர்களை சேருங்கள். இருக்கும் உறுப்பினர்கள் தங்களது அட்டையை புதுப்பித்துக்கொள்ளுங்கள். ஊடகங்கள் வெளியே செல்லலாம். இது உட்கட்சி விவகாரம். ஏதேதோ எதிர்பார்த்து வராதீர்கள். நான் தனியாக உங்களை சந்திக்கிறேன். கேள்விக்கு பயந்தவன் நான் அல்ல”
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.









