வேளாண் சட்டங்களை எதிர்க்கட்சிகள் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாணவரணி கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், மாணவர்களின் கல்விக் கடனை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கட்சிகள் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட வாசன், மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக பாடுபடுகிறது, அவர்களது வருவாயை இரட்டிப்பாக்க வேளாண் சட்டங்களை இயற்றி உள்ளதாகக் கூறினார்.
எதிர்க்கட்சிகள் கண்மூடித்தனமாக வேளாண் சட்டங்களை எதிர்த்து வருவதோடு, விவசாயிகளை தூண்டி விடுவதால் பல்வேறு மாநில விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், விவசாயிகளுக்கு கிடைக்கும் நலன்களை கெடுக்கும் வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் செயல்படும் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட தமாகா, பொதுத்துறை வங்கிகளிலும் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்துவதாக தெரிவித்தார். மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசாக அதிமுக இருக்கிறது என்றும், கூட்டணி தர்மத்திற்கு ஏற்றவாறு கூட்டணி பேச்சுவரத்தை நடத்தி தொகுதிகளை பெறுவோம் என்றும் கூறினார்.







