காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீல்
சேர் வசதி ஏற்படுத்தி கொடுக்காமல் இருப்பது மாற்றுத் திறனாளிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள்
குறைதீர்க்கும் நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவது வழக்கம்.
இந்நாளில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட முக்கிய உயர்
அலுவலர்களும், துறை சார்ந்த அலுவலர்களும் என 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள்
இந்நாளில் பொதுமக்கள் அளிக்கும் மனுவுக்கு முறையாக பதில் மனு அளிப்பதும் அது
சம்பந்தப்பட்ட தகவல்களை கேட்டு பெறுவதும் நடைமுறை வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் பொதுமக்கள் குடும்ப அட்டை பட்டா மாற்றம், பட்டா கோருதல், மின்வாரிய
சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் சாலை வசதிகள், தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி மனுக்களை அளிப்பர். இந்த மனுக்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு துறை சார்ந்த அலுவலருக்கு பரிந்துரை
செய்யப்பட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் உள்ள அலுவலர்களிடம்
அளிப்பர்.
இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு அடையாள
அட்டை, வீல் சேர் மற்றும் காதொலி கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கோரி மனு
அளிக்க தங்களுக்கு குடும்பத்துடன் வருகை புரிவது வழக்கம். இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆட்டோ மூலம் வரும் நிலையில் குறிப்பிட்ட தூரத்தில் ஆட்டோக்கள் நிறுத்தப்படும். அங்கிருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அளிக்கப்படும் வீல் சேர் மூலம் அரங்கத்திற்கு மாற்றுத் திறனாளிகள் வருவர்.
இதையடுத்து, முதலில் மாற்றுத் திறனாளிகளின் மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெறுவதும் அதை பரிந்துரைப்பதும் என்பது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல ஆட்சியர் அலுவலகத்தில் வீல் சேர்கள் முறையாக வைப்பதில்லை.
இந்நிலையில், இன்று தனது உதவியாளருடன் சிரமப்பட்டு மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளிக்கு சில பத்திரிகையாளர் உதவி செய்து வீல் சேர் எடுத்து வந்து உதவினர்.
காஞ்சிபுரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அத்தி வரதர் திருவிழாவில்
நூற்றுக்கணக்கான வீல் சேர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டு பல்வேறு அலுவலகங்களில் கிடப்பில் கிடக்கும் நிலையில், அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு வந்து மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் என்பது மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து அலுவலர் கூறுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு அரங்கத்திற்கு
வெளியே வீல்சேரை வைத்தால் திருடு போய்விடுவதாகவும், அதனால் அங்கு வைக்கவில்லை என்று கூறினார். மாற்றுத் திறனாளிகளுக்கு என தமிழக அரசு பல்வேறு சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் அளிக்க முன்வரும் நிலையில் அலுவலர்கள் முக்கியமான வீல் சேரை அளிக்க ஏனோ மனம் இல்லை என அங்கிருந்தவர்கள் புலம்பியபடி சென்றனர்.
-ம.பவித்ரா