பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார் அவருக்கு வயது 98. இந்திய பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்எஸ் சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று…

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார் அவருக்கு வயது 98.

இந்திய பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்எஸ் சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், வேளாண் பெருமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1925-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்தவர் எம்.எஸ். சுவாமிநாதன். பள்ளிப்படிப்பை  முடித்த பின்னர், திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தையும், கோவை வேளாண் கல்லூரியில் (தற்போது வேளாண் பல்கலைக்கழகம்) இளநிலை வேளாண்மை பட்டத்தையும் பெற்றார். பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தியவர். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ் பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராயச்சி நிர்வாகி, தலைவராக இருந்தவர். வேளாண்மைத்துறைச் செயலாளர், நடுவண் திட்டக் குழுவின் உறுப்பினர், மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர்.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த இவர், தேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகளை பெற்றவர். பெருமைமிகு மகசேசே விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது

கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருதையும் அவர் பெற்றுள்ளார்.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் தமிழ் ரத்னா விருது

வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பில் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய பங்களிப்பிற்காக, 2019-ம் ஆண்டு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் தமிழ் ரத்னா விருது எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி வழங்கி சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம் எஸ் சுவாமிநாதன் உடல் தேனாம்பேட்டை ரத்னா நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.