நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போடே கோஷி ஆற்றில் நேற்று முன்தினம் காலை சுமார் 8:30 மணி அளவில் பனிப்பாறைச் சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள், வாகனங்கள் என அனைத்தும் சேதமடைந்தன. இந்த பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 469-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேபாளத்தில் மிண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேபாளக் காவல்துறை வெளியிட்டுள்ள பதிவில், “நேபாளக் காவல்துறை (@NepalPoliceHQ) ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது; அதில், “திபெத் பகுதியில் உள்ள நீர் அணை மீண்டும் உடைந்துவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. எனவே, பாதுகாப்புப் படையினர், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உடனடியாக விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அல்லது மற்றவர்களுக்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




