”குழந்தையின் கை அகற்றம் : ரத்த ஓட்டம் குறைவானதால்தான் ரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளது “ அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!!

”குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் ரத்த ஓட்டம் குறைவானதால் இரத்த உறைதல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்த பின்  விளக்கம் அளித்துள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவர், அவரது ஒன்றரை வயது…

”குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் ரத்த ஓட்டம் குறைவானதால் இரத்த உறைதல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்த பின்  விளக்கம் அளித்துள்ளார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவர், அவரது ஒன்றரை வயது குழந்தைக்கு தலையில் நீர் வந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போடப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தையின் கை கருப்பாக மாறியுள்ளது. இது குறித்து செவிலியர்களிடம் தெரிவித்த போது, எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர்.

தொடர்ந்து கை மேலும் அழுகிய நிலையில், மருத்துவர்கள் குழந்தையின் கையை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  மருத்துவர்கள் இல்லாததாலும், அலட்சியத்தாலும் தான் தனது குழந்தையின் கை பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இதனிடையே, சம்பவம் குறித்து விசாரணை குழு அமைத்திருப்பதாகவும், தவறு ஏற்பட்டு இருந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. குழந்தையின் கை முழுதும் பாதிப்படையாமல் இருக்க,அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும் மருத்துவமனை விளக்கம் அளித்தது. வளர்ச்சி குறைவான குழந்தை என்பதாலும், குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாலும் அதற்கான சிகிச்சைகளும் எடுக்கப்படும் என மருத்துவர்கள் தரப்பு தெரிவித்தனர். குழந்தையின் பாதிக்கப்பட்ட கை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குழந்தையின் பெற்றோரிடம் அமைச்சர் நேரில் சந்தித்து  உடல்நிலை குறித்து விசாரித்தார். இதன் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது..

” ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீரின் ஒன்றரை வயது மகன் முகமது மகிர் பிறக்கும் போது பல்வேறு குறையுடன் பிறந்துள்ளது. பிறக்கும்போது குழந்தை 32 வாரங்களில் பிறந்தது, மூன்று மாதத்தில் தலையின் சுற்று பெரிய அளவில் நீர் வந்ததால்தான் உயர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்திருந்தனர்

தலையில் ரத்தம் செல்லக்கூடிய சர்குலேஷன் அடைப்பு ஏற்பட்டது குறித்து தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த குழந்தைக்கான சிகிச்சையானது நடை பெற்றது. ரத்த ஓட்டம் குறைவாக சென்றதால் கை தளர்ச்சி ஏற்பட்டு இரத்த உறைதல் ஏற்பட்டது.
பெற்றோர் கேட்டுக்கொண்டால், குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவும் தயார்”” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.