ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யக்கோரி சட்டத்துறை அமைச்சர் ரகுபதியுடன் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி சந்தித்து பேசினார்.
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சக இல்லத்தில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி சந்தித்தார். 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற மஜக-வின் கோரிக்கை தொடர்பாக அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.
ஆதிநாதன் ஆணைய பரிந்துரைகள் மற்றும் சட்ட வழிமுறைகள் குறித்தும் , கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் அண்ணா நூற்றாண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு இந்த மனிதாபிமான கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்றும் ஜனநாயக சக்திகள் ஆர்வமுடன் எதிர்நோக்குவதாகவும் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கவனத்தில் கொண்டிருப்பதாகவும், சட்டப்பூர்வ நடவடிக்கையை இந்த அரசு மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் உறுதியளித்ததகாவும் தமிமுன் அன்சாரி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி ஏற்கனவே பல இடங்களில் சிறை நிரப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது இதே கோரிக்கையை முன்னிறுத்தி செப்டம்பர் 27, 2023 அன்று சேலம் மத்திய சிறையை முற்றுகையிட்டு கோரிக்கை போராட்டம் நடத்த மஜக முடிவு செய்துள்ளதாக அன்சாரி குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ரகுபதியுடனான இச்சந்திப்பின்போது மாநிலச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம், மாநில துணைச் செயலாளர் அசாருதீன் ஆகியோரும் உடனிருந்தனர்.







