குருவாயூர் கோவில் குளத்தில் ரீல்ஸ் – சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்!

குருவாயூர் கோயில் குளத்தில் பிக்பாஸ் போட்டியாளர் ஜாஸ்மின் ஜாஃபர் என்ற பெண் கால் கழுவுவதை ரீல்ஸ் எடுத்து, சமூகவலைதளத்தில் பதிவிட்டதால் தற்போது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவில் வளாகத்தில் உள்ள கோவில் குளத்தில், பிக்பாஸ் போட்டியாளர் ஜாஸ்மின் ஜாஃபர் என்பவர் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

ஜாஸ்மின் ஜாஃபர் கோவில் குளத்தில் தனது கால்களை கழுவும் காட்சியை வீடியோவாக எடுத்து அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்தச் செயல் கோவில் நடைமுறைகளையும், பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்துவதாக பக்தர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்தச் சர்ச்சையையடுத்து, குருவாயூர் தேவஸ்தானம் உடனடியாக தலையிட்டு, குளத்தில் தரிசனம் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும், கோவில் சடங்குகளின்படி, குளத்தை சுத்திகரிப்பு செய்யும் சடங்குகள் நடத்தப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதுபோன்ற செயல்கள் பக்தர்களின் நம்பிக்கையை இழிவுபடுத்துவதாக தேவஸ்தானம் வருத்தம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம், வழிபாட்டு தலங்களில் சமூக வலைத்தளங்களுக்கான உள்ளடக்கத்தை உருவாக்குவது குறித்து ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.