பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
2016ஆம் ஆண்டு முதல் துபாய் நகரில் வசித்து வரும் பர்வேஷ் முஷாரப் நீண்டகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அங்குள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முஷாரப்பின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், இதுகுறித்து முஷாரப் குடும்பத்தினர் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “கடந்த 3 வாரங்களாக அமிலோய்டோசிஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் முஷாரப் சிகிச்சை பெற்று வருகிறார். மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். அவரது உடல் உறுப்புகள் செயல்படாததால் மீண்டு வருவது கடினம் எனத் தெரிகிறது. அவர் குணமடைய அனைவரும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/P_Musharraf/status/1535238352387063814
1999 முதல் 2008 ஆகஸ்ட் வரை பாகிஸ்தானை ஆட்சி செய்துவந்த பர்வேஷ் முஷாரப், ராணுவ தளபதி பதவியையும் தன்வசம் வைத்திருந்தார். ராணுவத் தளபதியாக முஷாரப் இருந்தபோது காஷ்மீரின் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் ஊடுருவ முயன்றனர். இதனால், 1999ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. இந்தப் போரில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.
இதையடுத்து, 2008ஆம் ஆண்டு முஷாரப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மீண்டும் பாகிஸ்தான் திரும்பியபோது பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷாரப்பை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தலில் போட்டியிடவும், நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தில் பர்வேஷ் அனுமதி கோரினார். நீதிமன்றம் அனுமதி வழங்கியதால் 2016ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து அவர் வெளியேறினார். இதற்கிடையே, பாகிஸ்தானில் அவசர நிலையை அமல் செய்த விவகாரத்தில் அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா







