முதுமலைக்கு வருகைதந்த குடியரசுத்தலைவரை சந்தித்த பொம்மன் – பெள்ளி தம்பதியினர் எத்தனை யானைக் குட்டிகளானாலும் பராமரிப்போம் என பெருமிதத்துடன் தெரிவித்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலேயே பழமையான யானைகள் முகாம்களில் ஒன்று. ஒவ்வொரு யானையும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாகன் மற்றும் காவடியால் (பராமரிப்பாளர்) பராமரிக்கப்பட்டு வருகின்றது. முகாம்களில் உள்ள யானைகளை தனிகவனத்துடன் அவர்கள் பராமரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ரகு, பொம்மி ஆகிய இரு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளை பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோர் பராமரித்து வந்தனர். இந்த நிகழ்வை மையமாக வைத்து ”தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டதை தொடர்ந்து அப் படத்திற்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து குட்டி யானைகளுடன் பொம்மன், பெள்ளி சர்வதேச அளவில் பிரபலமடைந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முதுமலைக்கு வருகை புரிந்து 2 பேரையும் பாராட்டினார். தொடர்ந்து நாடு முழுவதும் பொம்மன், பெள்ளிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் கடந்த 18-ம் தேதி குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பொம்மன், பெள்ளி சந்தித்து பாராட்டுகள் பெற்றனர்.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், வனத்துறை சார்பில், நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் தற்காலிக யானை பராமரிப்பாளராக பணியாற்றி வந்த பெள்ளிக்கு, முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டதற்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இவர் யானை பராமரிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் ஆவார்.
தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமுக்கு நேரில் வர இருப்பதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பொம்மன், பெள்ளியிடம் தெரிவித்திருந்தாா். அதன்படி, அவர் தனது தமிழ்நாடு பயணத்தின் ஒரு பகுதியாக தெப்பக்காடு வந்து சென்றாா். தெப்பக்காடு பகுதிக்கு வந்த குடியரசுத் தலைவரிடம் உரையாடிய பொம்மன், பெள்ளி தம்பதி கூறியதாவது:
“குடியரசுத் தலைவரை இரண்டாவது முறையாக சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. டெல்லியில் சந்தித்தபோது அதிக நேரம் உரையாட முடிந்தது. ஆனால் இப்போது அவ்வளவு நேரம் பேச முடியாவிட்டாலும் நிறைவாக உள்ளது. அவரிடம் நாங்கள் எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லை.
தமிழ்நாடு அரசு எனக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் ஏற்கெனவே வளா்த்த குட்டி யானைகளை தற்போது வேறு இளைஞா்கள் நன்றாக பராமரிக்கின்றனா். நான் மற்ற வேலைகளைக் கவனித்துக் கொள்கிறேன். அடுத்து ஏதாவது யானைக் குட்டி வந்தாலும் அதையும் சிறப்பாகப் பராமரிப்பேன். எத்தனை யானைக் குட்டிகள் வந்தாலும் அவற்றைப் பராமரிக்கத் தயாராக இருக்கிறோம் என்றனா்.








