‘மக்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் கைதாகுவதற்குத் தயார்’ – எம்.பி.ராகுல் காந்தி

விலைவாசி உயர்வு வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராக மத்திய அரசுக்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குண்டு கட்டாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். விலைவாசி…

விலைவாசி உயர்வு வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராக மத்திய அரசுக்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குண்டு கட்டாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் மற்றும் பேரணி நடத்தினர். இதன் ஒரு பகுதியாக டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணி நடத்தினர். பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பேரணி நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டுத் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேலாக நாடாளுமன்றம் – குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இடையே உள்ள விஜய்ஸ்சவுக் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தடுத்து வைக்கப்பட்டார்.

இந்த பேரணியின் போது காங்கிரஸ் கட்சியின் கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மத்திய அரசுக்கு எதிராகத் தொடர் முழக்கங்களை எழுப்பிய நிலையில் அவரை டெல்லி காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றது. அப்போது பேசிய ஜோதிமணி விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மைக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும் எனக் கூறினார்.

இதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அப்போது, செவியே இல்லாத மத்திய அரசு எவ்வாறு இந்த பிரச்சனை மீது மட்டும் அவர்கள் செவி சாய்ப்பார்கள் எனவும், மக்களுடைய உணர்வு, துன்பம், பிரச்சனை மற்றும் சுமைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இருப்பதாகத் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘நியூஸ் 7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா – என்ன ஸ்பெஷல் தெரியுமா?’

மேலும், நாட்டில் விலைவாசி உயர்ந்து இருக்கிறது என ஒப்புக் கொண்டால் மட்டுமே அது குறித்து விவாதிக்க முடியும். ஆனால், மத்திய அரசு விலைவாசி உயர்ந்து உள்ளது என ஒப்புக்கொள்ள மறுக்கிறது எனத் தெரிவித்த அவர், அவர்கள் வரலாற்றுப் பாடங்களை மட்டுமே சொல்கிறார்களே தவிரப் பொருளாதாரப் பாடங்களைப் படிப்பதே கிடையாது எனத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து மாணிக்கம் தாக்கூர், மக்கள் பிரச்சனையான விலைவாசி உயர்வு தொடர்பாகப் பாராளுமன்றத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்ததாகவும், அதை ஒரு பொருட்டாக அவர்கள் கருதவில்லை எனவே அதனைக் கண்டிப்பதாகக் கூறினார். இதேபோல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், ஜி.எஸ்.டி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து முற்றுகை போராட்டம் நடத்த முற்பட்டபோது காவல்துறை எங்களைக் கைது செய்கிறது. ஆனால், எந்த கைது நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து போராடுவோம் என மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் டெல்லி கிங்ஸ் வே காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் போராட்டம் நடத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் கைதாகுவதற்குத் தயார் என ராகுல் காந்தி கூறியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.