“ஆர்பிஐ-ன் புதிய வரைவு விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது” – அமைச்சர் பெரியகருப்பன்!

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகள், மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை சார்பில் 49 அறிவிப்புகள் வெளியிட்டதாகவும், அதன் நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,

“மத்திய அரசின் ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் பொருந்தாது. ஏனெனில் கூட்டுறவு கடன் சங்கங்கள் ரிசர்வ் வங்கியின் கீழ் வரவில்லை. இந்த விதிகள் தேவையில்லாதது. இதனை மறுபரிசீலனை செய்ய ரிசர்வ் வங்கிக்கு முறையாக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி நகை கடன் தரப்பட்டுள்ளது. நியாய விலை கடைகளில் ஆள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.