மதுரையில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் ஒரு கசப்பான நிகழ்வு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்முக காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலின்போது நாட்டிற்காக உயிர்நீத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மதுரை விமான நிலையத்தில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வந்தபோது, அவர் கார்மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பண்புமிக்க கண்ணியமிக்க மதுரையில் இது போன்ற சம்பவம் இதற்கு முன்பு நடைபெற்றதில்லை என்றார்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நோக்கி காலணி வீசப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று கூறிய ஆர்.பி.உதயகுமார், உணர்ச்சி கொந்தளிப்பில் விரும்பத்தகாத வகையில் பாஜக தொண்டர்கள் நடந்து கொண்டது வேதனையளிப்பதாக கூறினார். யாருமே விரும்பாத கசப்பான சம்பவம் இது என்றும் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்தார். பாஜகவின் மாவட்ட தலைவராக இருந்து தற்போது அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சரவணன், காலணி வீச்சு சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.