ராசிபுரத்தை அடுத்த சீராப்பள்ளி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாட்டையால் அடி வாங்கி வினோதமான முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து பூச்சட்டி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பூச்சட்டியுடன் ஊர்வலமாக கோவிலை வலம் வந்தனர். பின்னர் பூச்சட்டியில் உள்ள நெருப்பை கோவிலின் முன்பாக கொட்டி அதை பக்தர்கள் நெற்றியில் திருநீராக பூசி வழிப்பட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான சாட்டையடி திருவிழா நடைபெற்றது. இதில் கோவில் பூசாரி முன்பாக கைகளை தூக்கி கொண்டு வரிசையாக பக்தர்கள் நிற்கின்றனர்.சாட்டையுடன் நிற்கும் பூசாரி பக்தர்களை அருள் வந்து சாட்டையால் அடிக்கிறார். பக்தர்கள் நடனமாடி கொண்டே அடி வாங்கி சென்றனர். இந்த வினோத நிகழ்வு பல ஆண்டுகாலமாக நடைபெற்று வருவதாகவும் சாட்டையால் அடி வாங்கினால் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
—கோ. சிவசங்கரன்.







