“ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்”- விமர்சனம்

அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கும் “ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” திரைப்படத்தை ஜோதிகா – சூர்யா தயாரித்திருக்கிறார்கள். வாணி போஜன், ரம்யா பாண்டியன், மிதுன் மாணிக்கம் நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்க,…

அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கும் “ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்” திரைப்படத்தை ஜோதிகா – சூர்யா தயாரித்திருக்கிறார்கள். வாணி போஜன், ரம்யா பாண்டியன், மிதுன் மாணிக்கம் நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்க, கிரிஷ் இசையமைத்திருக்கிறார். 113 நிமிடங்கள்தான் படத்தின் நீளம்.

விவசாயி குன்னிமுத்து (மிதுன் மாணிக்கம்) அவரது மனைவி வீராயி (ரம்யா பாண்டியன்) தங்களது பிள்ளைகள் போல ஆசை ஆசையாக வளர்க்கும் கருப்பன், வெள்ளையன் என இரண்டு மாடுகள் காணாமல் போகின்றன. மாட்டை கண்டுபிடிக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செல்கிறார் குன்னிமுத்து. அங்கு அவரது புகார் ஏற்கப்படவில்லை. மாடுகளை கண்டுபிடிக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறார். மாடுகள் காணாமல் போகிறதா அல்லது கடத்தப்படுகிறதா இதற்குள் இருக்கும் அரசியல் என்ன, மாடுகளை கண்டுபிடிக்க விவசாயி குன்னிமுத்து நடத்தும் போராட்டமே இப்படத்தின் கதை.

அரசியல் தலைவர்கள் முதல் ஊடக நிறுவனங்கள் வரை அனைவரின் மீது இத்திரைப்படம் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. பணமழிப்பிழப்பு, பெட்ரோல் விலை உயர்வு, இந்தித் திணிப்பு உள்பட சமகால அரசியலையும் போகிற போக்கில் பேசிச் சென்றுள்ளது. இருந்தாலும் ஒரு தெளிவான அரசியலை படம் பேச தவறியிருக்கிறது. எல்லாவற்றையும் போகிற போக்கில் கேலி செய்யும் ஒரு சமூக வலைதள பதிவு போல் படம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பொதுப்பார்வையிலிருந்து பார்த்தால் இது ஒரு சிறந்த திரைக்கதையாக தெரியலாம். ஆனால் இப்படைப்பு ஒரு முழு திரை வடிவமாக மாறவில்லை.

**படத்தின் பலம்**
திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார் பாடகர் க்ரிஷ். படத்தின் இசை ரசிக்கும் படியாக இருக்கிறது. பாடல் வரிகள் எளிமையாகவும், ஆழமான கருத்துகள் நிரம்பியதாகவும் உள்ளது. படத்தின் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருக்கிறது. கிராமத்தின் வறட்சி, மக்களை அவர்கள் இயல்பிலேயே ஒளிப்பதிவாளர் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

படத்தின் முக்கிய பலமே நடிகர்கள்தான். கதாபாத்திரத்திற்கு பொருந்தும் முகங்களை இயக்குநர் தேர்வு செய்திருக்கிறார். குன்னிமுத்துவாக நடித்திருக்கும் மிதுன் மாணிக்கத்தின் நடிப்பு பாராட்டுக்குறியது. குன்னிமுத்துவின் நண்பராக வரும் வடிவேல் முருகன், அறிமுகத் திரைப்படம் போல இல்லாமல் நடிப்பில் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ரம்யா பாண்டியன் மிக இயல்பாகவும், கதாபாத்திரத்தோடு பொருந்திப்போகிறார். வாணி போஜன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு தகுந்த நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். அப்பத்தாவாக வரும் பாட்டி நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

நகரத்தில் வசிக்கும் 65% பேர் கிராமங்களில் இருந்து வந்தவர்கள்தான். அதில், எவ்வளவு பேர் தனது சொந்த கிராமத்தின் நிலையை மாற்ற முயன்றிருக்கிறார்கள் என்ற கேள்வியை இத்திரைப்படம் முன்வைத்துள்ளது. ஆனால், இங்கே தனிமனிதன் எந்த மாற்றத்தையும் நிகழ்த்திவிட முடியாது என்ற உண்மையையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டியிருக்கிறது. எப்படி இருந்தாலும் இது போன்ற வித்தியாசமான கதைகளை தயாரிக்கும் ஜோதிகா- சூர்யாவை நாம் பாராட்டியே ஆக வேண்டும். சில சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் திரைப்படங்களில் அதனை கருத்தில் கொள்ள முடியாது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.