முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு இயற்றிய தீர்மானத்தின் மீது 3 முதல் 4 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார் என மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகலில் 4 வாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பார் என மத்திய அரசு உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இந்த குழப்பம் தொடர்பாக பேரறிவாளன் தரப்பில் நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு முன்பு இன்று முறையிடப்பட்டது. அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், நேற்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த நிலைப்பாடான 4 நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இதனையடுத்து, ஆளுநர் முடிவெடுக்க ஒரு வார கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வார காலத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.







