“கதம் கதம்” to “I AM COMING”- அரசியலை மீண்டும் தொடர நினைக்கிறாரா ரஜினி?

தனது இதயத்துக்கு எப்போதும் நெருக்கமான படம் என்கிற அறிமுகத்தோடு பாபா படத்தின் மறுவெளியீட்டிற்கான டிரெய்லரை வெளியிட்டு உள்ளார் ரஜினிகாந்த். டிரெய்லரில் இருக்கும் உள் அர்த்தங்கள் என்னவாக இருக்கும் என்பதை டிகோட் செய்கிறது இந்த கட்டுரை.…

தனது இதயத்துக்கு எப்போதும் நெருக்கமான படம் என்கிற அறிமுகத்தோடு பாபா படத்தின் மறுவெளியீட்டிற்கான டிரெய்லரை வெளியிட்டு உள்ளார் ரஜினிகாந்த். டிரெய்லரில் இருக்கும் உள் அர்த்தங்கள் என்னவாக இருக்கும் என்பதை டிகோட் செய்கிறது இந்த கட்டுரை.

ரஜினியை பொருத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையேயான தொடர்பில் முக்கிய அங்கம் வகிப்பது குறியீடுகள்தான். அது நிஜமாக இருந்தாலும், மாயையாக இருந்தாலும் லட்சக்கணக்கான ரசிகர்களின் நம்பிக்கைகளை சுமந்தே அந்த குறியீடுகள் நகர்ந்து வந்திருக்கின்றன. திரைப்படங்களில் ரஜினி பேசிய வசனங்கள், பொது மேடைகளில் அவரது உரைகள் என ரஜினியின் ஒவ்வொரு அசைவிலும் ஏதாவதும் அர்த்தம் கற்பிக்கப்படும்.

அந்த வகையில் தற்போது பாபா படத்தின் மறுவெளியீடும்  பேசு பொருளாகியுள்ளது. ஒரே படம்தான் ஆனால் வெவ்வேறு காலகட்டம்…வெவ்வேறு சூழ் நிலைகளில்…வெவ்வேறு அர்த்தங்களை கொடுக்கின்றன. பொதுவாக பிரம்மாண்ட வெற்றி பெற்ற படங்களைத்தான் மறுவெளியீடு செய்வார்கள். ரஜினியின் பிலிமோகிராபியில் வெற்றிப் படங்களுக்கு பஞ்சமேயில்லை. எத்தனையோ மெகாஹிட்டுகள் அவரது படவரிசையில் இருந்தாலும் பாபா படத்தை மறுவெளியீடு செய்வதற்கும், அந்த மறுவெளியீட்டிற்கு ரஜினி கொடுக்கும் முக்கியத்துவமும் அந்த படம் குறித்து ஆராய்வதை ஊக்குவிக்கிறது. அத்துடன் சமீபகாலமாக ரஜினியைச் சுற்றி நடந்த நிகழ்வுகளையும் அந்த படத்தோடு பொருத்திப்பார்க்க வைக்கிறது.

தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்த காலத்தில் ரஜினி முன்னிறுத்திய ஆன்மீக அரசியல் என்பதற்கு பொருத்தமாக ஆன்மீகமும் அரசியலும் ததும்பி நிற்கும் படம்தான் பாபா. படத்தில் ஆளுங்கட்சியினரின் ஆராஜகத்திற்கு எதிராக ரஜினி பேசும் வசனங்களில் அரசியல் நெடி தூக்கலாகவே இருக்கும். அதே நேரம் அந்த படம் வெளியான சமயத்தில் பாமகவினருக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையேயான மோதல், திராவிடர் கழகத்தினர் ரஜினிக்கு பகிரங்கமாக விடுத்த போராட்ட எச்சரிக்கைகள் என திரைக்கு உள்ளேயும், வெளியேயும் பாபா படத்தைச் சுற்றி அரசியல் நெருப்பு தகித்துக்கொண்டுதான் இருந்தது.

தாம் அரசியலுக்கு வருவேன் என்றோ, வரமாட்டேன் என்றோ ரஜினி வெளிப்படையாக அறிவிக்காத சூழ்நிலையில் கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாபா படம் வெளியானது. அப்போது ”கட்சிகளை, பதவிகளை நான் விரும்ப மாட்டேன் ஆனால் காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்” என்பது போன்ற வசனங்களும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ரஜினி பாடுபடுவது போன்ற காட்சி அமைப்புகளும் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தின. ஆன்மீக வாழ்விற்காக சாமியார்களுடன் இமயம் செல்வதா அல்லது அரசியல் மாற்றத்திற்காக மக்களுடனேயே தங்குவதா என்று பாபா படத்தில் ரஜினி மனதில் ஒரு பட்டிமன்றமே நடக்கும். கிளைமாக்சில் இமயமே தனது இலக்கு என கிளம்பும் பாபா எதிர்பாராமல் ஏற்பட்ட திருப்பத்தால் தனது முடிவை மாற்றிக்கொண்டு மக்களை நோக்கி திரும்புவார். இந்த யூ டேர்ன் அப்போது நிஜ ரஜினியின் அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் முடிவு என ரசிகர்கள் கொண்டாடினர்.

ஆனால் அந்த படம் வெளிவந்து 15 ஆண்டுகளாக அவரது அரசியல் வருகை கேள்விக்குறியாகவே தொடர்ந்தது. எனினும் ரசிகர்களின் நம்பிக்கை குலையவில்லை. வருங்கால முதல்வரே என்று போஸ்டர்கள் தொடர்ந்தன. இந்த சூழலில்தான் டிசம்பர் 2017ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி ரசிகர்களுடனான சந்திப்பின்போது ”நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்ற வார்த்தையை உதிர்த்து ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றார்.  கட்சி தொடங்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில் ரசிகர்கள் தீவிரமாக களம் இறங்கினர். இடையில் மக்களிடையே எழுச்சி வரும்போது அரசியலுக்கு வருகிறேன் என ரஜினி கூறியது ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ”ஆட்சி மாற்றம்…அரசியல் மாற்றம்….மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்,” என்றெல்லாம் கூறி தான் கட்சி தொடங்குவது உறுதி என மீண்டும் உறுதிப்படுத்தினார். மக்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை அரசியலில் நிச்சயம் பயணிப்பேன் எனக் கூறி ரசிகர்களின் மனதில் நம்பிக்கைகளையும், உற்சாகத்தையும் விதைத்தார்.

ஆனால் அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாகவே அந்த நம்பிக்கைகளும், உற்சாகமும் கானல் நீராக கலைந்தது. கொரோனாவையும், தனது உடல் நிலையை காரணம் காண்பித்து அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினி அறிவித்தது கட்சியின் தொடக்க நாளை எண்ணிக் காத்திருந்த ரசிகர்களின் இதயங்களை நொருக்கியது. ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரம்மாண்ட போராட்டத்தை ரசிகர்கள் நடத்தினர். அப்போது ”கதம் கதம் முடிந்தது முடிந்ததுதான்” என்று பாபா படத்தில் தாம் கூறிய வசனத்தைப்போல் இனி எப்போதும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக கூறினார் ரஜினி. இதையடுத்து ரஜினியை சுற்றி சுமார் 30 ஆண்டுகளாக தொடர்ந்தே வந்த அரசியல் பரபரப்புகள் சற்று ஓய்ந்தன.

இந்நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவரைச் சுற்றி மீண்டும் அரசியல் பரபரப்புகளும், யூகங்களும் சூழத் தொடங்கியுள்ளன. ஆகஸ்ட் முதல் வாரத்தில் டெல்லி சென்று வந்தார் ரஜினி. அப்போது முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களை அவர் சந்தித்தாக கூறப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் 8ந்தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திடீரென சந்தித்தார் ரஜினி. இந்த சந்திப்பு ஏன்? மீண்டும் அரசியல் ஆசை ரஜினிக்கு வந்துவிட்டதா என்கிற விவாதங்கள் எழுந்த நிலையில், அதற்கு வலுசேர்க்கும் வகையில் ரஜினி கூறிய வார்த்தைகளும் அமைந்தன. ஆளுநருடன் அரசியல் பேசினேன் என ரஜினி கூறியது, அவர் அரசியலுக்கு வந்தே தீரவேண்டும் என எண்ணும்   ரசிகர்களிடையே நம்பிக்கைகளை துளிர்க்கச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் ரஜினி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பாடுபடுவதுபோன்றும், இமயமலை பயணத்தை கைவிட்டு மக்களுக்காக பொதுவாழ்க்கைக்கு திரும்பவது போன்றும் காட்சி அமைப்புகளை கொண்ட ”பாபா”  படம் மறு வெளியீடு செய்யப்படுகிறது. அந்த படம் ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12ந்தேதி அன்று வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில் அதனைக் கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

எனது இதயத்திற்கு எப்போதும் நெருக்கமான படம் என்கிற அறிமுகத்தோடு பாபா படத்தின் டிரெய்லரை தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டார். ”I AM COMING” என்று கூறுவதோடு டிரெய்லர் காட்சிகள் நிறைவடையும். ”நான் வரேன்” என அரசியலுக்கு வருவதைத்தான் ரஜினி குறிப்பிடுகிறாரா என்கிற சிந்தனை  ரஜினி அரசியலுக்கு வர இன்னும் வாய்ப்பிருக்கிறது என நம்பிக்கொண்டிருக்கும் ரசிகர்களிடையே இதன் மூலம் ஏற்படக்கூடும். பாபா படத்தில் ரஜினி அடிக்கடி கூறும் வசனம் “கதம்…கதம்…”  முடிந்தது முடிந்ததுதான் என்பதுதான் இதன் அர்த்தம். இந்த வசனம் பாபா டிரெய்லரில் ஒரு இடத்தில்கூட இடம்பெறவில்லை. இனி அரசியல் இல்லை என்கிற ரஜினி எடுத்த முடிவு  முடிந்துபோன முடிவாக இல்லை அது மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது என்பது டிரெய்லர் மூலம் சூசகமாக உணர்த்தப்படுகிறதா என்ற உற்சாகமும் ரஜினி ரசிர்கள் மனதில் எழக்கூடும்.

-எஸ்.இலட்சுமணன்   

  

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.