சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறைக்கு மாற்றி உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை போன்றவை சுகாதாரத்துறைக்கு மாற்றப்படும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதன்படி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ், 113புள்ளி 21 ஏக்கரில் அமைந்துள்ள அந்த கல்வி நிறுவனங்கள் முழுவதுமாக சுகாதாரத்துறைக்கு மாற்றப்படுவதாகவும், இனி இந்தக் கல்லூரிகள் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளாக செயல்படும் என்றும் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அரசாணை வெளியிட்டுள்ளார்.
3 கல்லூரிகளிலும் பயிலும் 2293 மாணவர்கள், 3 கல்லூரிகளிலும் பணியாற்றும் 332 பேராசிரியர்கள், 1426 பணியாளர்கள், 287 ஓய்வூதிய தாரர்கள், அவர்களுக்கான செலவினங்கள், அங்கீகாரம் போன்ற அனைத்தும் இனி சுகாதாரத்துறையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், சுகாதாரத்துறை சார்பில் இதற்கான உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த 3 கல்லூரிகளிலும் இடங்களை நிரப்புதல், கட்டணம் நிர்ணயித்தல் போன்ற பணிகளை சுகாதாரத்துறையே மேற்கொள்ள வேண்டும் என்றும், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அங்கீகாரத்தை மாற்ற வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு கையகப்படுத்திய பின்னரும் அங்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாகக் கூறி கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த நிலையில், கல்லூரியை சுகாதாரத்துறைக்கு மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







