நடிகை ரைசாவிடம் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, வழக்கு தொடர்ந்துள்ளதாக மருத்துவர் பைரவி செந்தில் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான ரைசா வில்சன், அண்மையில் பிரபல தோல் மருத்துவர் பைரவி மீது, புகார் ஒன்றை அளித்திருந்தார். THERMAL FILLERS எனப்படும் சிகிச்சைக்காக, தான் பைரவியிடம் சென்றதாகவும், அவர் தனக்கு தவறான சிகிச்சை அளித்ததால், முகம் வீங்கிவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்ட ரைசா, தன்னை போல வேறு எவரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, மருத்துவ ஆணையத்தில் பைரவிக்கு எதிராக, புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பொதுவெளியில் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக, நடிகை ரைசாவிடம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, மருத்துவர் பைரவி வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், முக அமைப்பை அழகாக மாற்றும் சிகிச்சை, ரைசாவுக்கு அளிக்கப்பட்டதாகவும், இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், ஆனால், நடிகை ரைசா அதனை கடைபிடிக்கத் தவறி இருக்கலாம், என்றும் தெரிவித்தார். மேலும் வீக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படக் கூடும் என, ரைசாவுக்கு முன்பே அறிவுறுத்தியதாகவும், மருத்துவர் பைரவி தெரிவித்துள்ளார்.







