ஓமலூர் அருகேயுள்ள பாகல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மழைநீர்
சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். தண்ணீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பாகல்பட்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார
நிலையம் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட
மக்கள் தினமும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்து
செல்கின்றனர். இங்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படுகிறது. இரண்டு
மருத்துவர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில்,
அரசு மருத்துமனை வளாகம் முழுமையும் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தி
வருகிறது. தொடர்ந்து மழை பெய்ததால், காட்டாற்று வெள்ளம் ஆங்காங்கே
பெருக்கெடுத்து ஓடியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாகல்பட்டி கிராமத்தில் மிக அதிகபட்ச மழை பெய்ததால், பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல பாகல்பட்டி அரசு மருத்துவமனை கட்டிடத்தை சுற்றிலும் அதிகபட்ச தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், மருத்துவமனை முன்பாகவும், நுழைவாயிலிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், மருத்துவமனைக்கு வரும் மருத்துவர்கள், நோயாளிகள் தண்ணீரிலேயே நடந்து மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், மருத்துவமனையின் அனைத்து கட்டிடங்களையும் மழை நீர் சூழ்ந்துள்ளதால்,
கட்டிடங்கள் இடிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதேபோல சிகிச்சைக்கு
வரும் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், மழைநீர் சூழ்ந்தே
இருப்பதால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள தண்ணீர்
துர்நாற்றம் வீசுவதால் மருத்துவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால்,
மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், நிரந்தரமாக மழைநீர் உள்ளே வராத வகையில் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரம் இது குறித்த செய்திகளை எடுக்கக் கூடாது, வெளியிடக் கூடாது என்று அங்கு பணியாற்றும் மருத்துவர் ஜனனி கடுமையாக நடந்து கொண்டார். மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதியிலேயே நோயாளிகளை நிற்க வைத்திருந்தனர். வெளிபகுதியிலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கபட்டது. இதனால், மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்ற மருத்துவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
-ம.பவித்ரா