ரயில்வே பள்ளி To ராக்கெட் சாதனை – சந்திரயான் 3ஐ சாத்தியமாக்கிய அறிவியல் தமிழர் வீரமுத்துவேல் யார்..?

சந்திரயான் 3ஐ சாத்தியமாக்கிய அறிவியல் தமிழர் வீரமுத்துவேல் யார் அவரது பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி…

சந்திரயான் 3ஐ சாத்தியமாக்கிய அறிவியல் தமிழர் வீரமுத்துவேல் யார் அவரது பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. முதலில் பூமியை நீல்வட்டப்பாதையில் சுற்றிய சந்திரயான் 3-ன் சுற்றுவட்டப் பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு பூமியை சுற்றிவந்த சந்திரயான் 3-ஆனது ஆகஸ்ட் 1-ஆம் தேதி புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

இதனை அடுத்து மைல்கல் நிகழ்வாக ஆகஸ்ட் -5 ஆம் தேதி நிலவின் ஈா்ப்பு விசைக்குள் சந்திரயான் 3 நுழைந்தது. பின்னர் நிலவை சுற்றிவந்த சந்திரயான் 3-ன் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டது. இதன் அடுத்தக்கட்ட முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 17-ஆம் தேதி உந்துகலனில் இருந்து விக்ரம் லேண்டா் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது.

பின்னர் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் மிக நெருக்கமான சுற்றுப் பாதையான 25 கி.மீ. x 134 கி.மீ. தொலைவில் விண்கலம் செலுத்தப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 21-ஆம் தேதி சந்திரயான்-2 மூலம் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் மற்றும் சந்திரயான்-3 ‘விக்ரம்’ லேண்டா் இடையே தகவல் தொடா்பு வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை 5:44 க்கு  நிலவிற்கும் விக்ரம் லேண்டருக்கும் இடையே உள்ள இடைவெளியை சிறிது சிறிதாக குறைக்கும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது.
அதே நேரத்தில் விக்ரம் லேண்டரின் கால்கள் நிலவை நோக்கி சரியாக திருப்பப்பட்டது. இதனை அடுத்து நிலவை நோக்கி மெல்ல விக்ரம் லேண்டர் நெருங்கிய நிலையில், இறுதியாக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தடம் பதித்தது.  அப்போது “இந்தியா, நான் என் இலக்கை அடைந்துவிட்டேன், நீங்களும் தான்”  என்று சந்திராயன் -3-ல் இருந்து இஸ்ரோவிற்கு செய்தி வந்தது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது.

சந்திரயான் 3 வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பவர் அதன் திட்ட இயக்குனரான வீர முத்துவேல்தான். நிலவில் ரோவர் தரையிறங்குவது தொடர்பான அவரின் ஆய்வு சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்க வழிவகுத்தது. சந்திரயான் 3 திட்ட இயக்குனரான வீர முத்துவேல் யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வீரமுத்துவேல் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தையின் பெயர் பழனிவேல். தெற்கு ரயில்வேயில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வீரமுத்துவேல் தனது பள்ளிப் படிப்பை விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில் படித்தார். இதன் பின்னர் இயந்திரவியல் ஆர்வம் கொண்ட அவர் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் மூன்றாண்டுகள் டிப்ளமோ படித்தார்.

இதன்பிறகு பொறியியல் படிப்பை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்றார். அத்துறை மீது அவருக்கு இருந்த ஆர்வம் அவரை மேலும் மேலும் படிக்கத் தூண்டியது. இதன் பிறகு பொறியியல் துறையில் முதுகலைப் படிப்பை திருச்சியில் உள்ள ஆர்.இ.சி கல்லூரியில் பயின்றார். இதன் பின்னர் சென்னை ஐஐடியிலும் தனது கல்வியைத் தொடர்ந்த அவர் பல ஆய்வுகளை மேற்கொண்டார். ஏரோ ஸ்பேஸ் துறையில் அதிக ஆர்வம் கொண்ட அவர் ஐஐடியில் பல ஆய்வுகளை மேற்கொண்டதன் விளைவாக இஸ்ரோவில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது.

தனது படிப்பை முடித்த பின்னர் எல்லோரையும் போலவே சில நாட்கள் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றியுள்ளார் வீர முத்துவேல். அதன் பிறகு பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநடிக்ஸ் நிறுவனத்தில் ஹெலிகாப்டரின் வடிவமைப்பு தொடர்பான ஆராய்ச்சி பணியில் சேர்ந்தா. இதன்பிற்கு  கடந்த 2014 முதல் இஸ்ரோவில் பணியாற்றி வரும் வீர முத்துவேல் 2016ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்படும் விண்கலத்தின் மின்னணு தொகுப்பில் அதிர்வுகளை கட்டுப்படுத்துவதற்கான முறை குறித்து ஆய்வு கட்டுரை ஒன்றை சமர்ப்பித்தார்.

வீரமுத்துவேல் சமர்பித்த ஆய்வு கட்டுரை குறித்து பெங்களூரில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மையத்தில் சோதனை செய்யப்பட்டது.  இந்த ஆய்வுக் கட்டுரைதான் நிலவில் விண்கலத்தினை பாதுகாப்பாக தரையிறக்குவதற்கு உதவியதாக சொல்லப்படுகிறது.

மேலும் வீரமுத்துவேல் கண்டறிந்த இந்த தொழில்நுட்பம் நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கும் ரோவரை இயக்குவதற்கும் உதவிகரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தொழில்நுட்பம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த ஆய்வுதான்  வீரமுத்து்வேலுக்கு 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 3ன்  திட்ட இயக்குநர் எனும் பொறுப்பை தேடித்தந்தது. சந்திரயான் 3 திட்டத்தில் வீர முத்துவேலின் பங்களிப்பை போலவே சந்திரயான் 2லும் அவரது பங்களிப்பு உண்டு. சந்திரயான் 2ன் திட்ட இயக்குநர் வனிதா முத்தையாவின் அணியில் வீர முத்துவேலும் இடம்பெற்றிருந்தார்.

சந்திரயான் 2 திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த வனிதா முத்தையா வேறு துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான் 3 திட்ட இயக்குனராக  விஞ்ஞானி வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். வீரமுத்துவேல் தலைமையிலான குழு கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு வகையான ஆய்வு மற்றும் சோதனைகளுக்கு பிறகு சந்திரயான் 3 விண்கலத்தை தயாரித்தது. குறிப்பாக சந்திரயான் 2 திட்டத்தில் ஏற்பட்ட கோளாறுகளை கண்டறிந்து அதனை மேம்படுத்தி சந்திரயான் 3 விண்கலம் தயார் செய்யப்பட்டது.

விஞ்ஞானி வீரமுத்து வேலுக்கு கீழே 29 துணை இயக்குநர்களும், அவர்களுக்குக் கீழே எண்ணற்ற விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் இணைந்து உருவாக்கியதுதான் சந்திரயான்-3 திட்டத்தை உருவாக்கினர. மெய்நிகர் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் குறித்தான ஆய்வில் ஆர்வம் கொண்ட வீரமுத்துவேலின் முழு ஈடுபாட்டில் சந்திரயான் 3 தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணுக்குச் சென்ற சந்திரயான் 3 பல்வேறு கடினமான கட்டங்களை வெற்றிகரமாகக் கடந்து இன்று நிலவில் கால்பதித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

சந்திரயான் 3 திட்டத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்ட வீரமுத்துவேலின் தந்தை தனது மகனை பற்றிக் கூறும்போது..

“ எனது மகன் சந்திராயன் 3 திட்ட இயக்குனராக அறிவிக்கப்பட்டதிலிருந்து  வீட்டிற்கு வரவே இல்லை. தனது மகளின் திருமணத்திற்கு கூட வர முடியாது என்று அவர் தெரிவித்த போது இந்தியா தான் முக்கியம் அந்த பணியை செய் என்று கூறினேன். இன்று எனது மகன் சாதனை படைத்தது பெருமிதமாக உள்ளது. உலக நாடுகளே எதிர்பார்த்த நிகழ்வு வெற்றிகரகமாக நடைபெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது”  என  பழனிவேல் தெரிவித்திருப்பது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

– ச.அகமது, நியூஸ்7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.