இந்தியாவில் அரசியல் சாசனம் தாக்கப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கு மற்றும் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அப்போது, இந்தியாவில் ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் பல்வேறு அமைப்புகள் திட்டமிட்ட ரீதியில் தொடர்ந்து தாக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். இந்திய அரசியல் சாசனமும் தாக்கப்படுவதாக அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதனால், இந்தியாவில் உள்ள மாநிலங்கள், மத்திய அரசுடன் உரையாட முடியாத நிலை உள்ளதாக அவர் விமர்சித்தார்.
இந்தியாவின் ஜனநாயகம் உலக நன்மையோடு தொடர்புடையது என தெரிவித்த ராகுல் காந்தி, அதுதான் உலகிற்கு மைய நங்கூரமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். ஜனநாயகத்தின் முழுமையான பலனை அனுபவித்தவர்கள் இந்தியர்கள் என கூறிய ராகுல் காந்தி, அது உடைந்தால் சர்வதேச அளவில் பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்றார். இதை அமெரிக்காவும் உணர்ந்துள்ளதாக ராகுல் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, மற்றவர்கள் கூறுவதை கவனிக்கும் தன்மை பிரதமருக்கு இருக்க வேண்டியது அவசியம் என்றும், அந்த தன்மை இருக்கும்போதுதான் தீர்வுகள் கீழ் மட்டம் வரை சென்று சேரும் என்றும் குறிப்பிட்டார். ஆனால், பிரதமர் மோடிக்கு மற்றவர்கள் கூறுவதை கவனிக்கும் தன்மை இல்லை என அவர் குற்றம் சாட்டினார். பேச்சு சுதந்திரத்தை அனுமதிக்காத ஒரு நாடாக இந்தியா இருக்க முடியாது என தெரிவித்த ராகுல் காந்தி, ஆனால், பிரதமர் அலுவலகம் உள்பட அரசு அமைப்புகள் சுதந்திரமாக பேசுவதில்லை என குறிப்பிட்டார்.
இந்திய குடிமக்களுக்குள் பரஸ்பர கலந்துரையாடல் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் நம்புவதாக தெரிவித்த ராகுல் காந்தி, ஆனால், பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் அப்படி அல்ல என்றார். அரசின் பலன்கள் கிடைப்பதும் கிடைக்காததும் அவரவர் கர்மவினையைப் பொறுத்தது என்பதில் நம்பிக்கை உடையவர்களாக பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் இருப்பதாக ராகுல் விமர்சித்தார். ஆனால், தலித்தோ, பிராமணரோ யாராக இருந்தாலும் அரசின் திட்டங்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டிருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.









