அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்கட்சி எம்.பி.ராகுல்காந்தி போட்டியிடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து கடந்த 2019ம் ஆண்டு ராகுல்காந்தி ராஜினாமா செய்ததையடுத்து இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 30ந்தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில் ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வலியுறுத்தி தமிழ்நாடு, ராஜஸ்தான், பீகார், ஜம்முகாஷ்மீர், சத்தீஷ்கர், உள்ளிட்ட பல்வேறு மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க அக்கட்சி தொண்டர்கள் ராகுல்காந்தியை வலியுறுத்தி வரும் நிலையில், தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி போட்டியிட வாய்ப்பு இல்லை என அக்கட்சி வட்டாரங்கள் கூறுவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் வகையில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை ராகுல்காந்தி கடந்த 7ந்தேதி முதல் மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் தனது பயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி, காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். தற்போது கேரளாவில் நடை பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, வரும் 29ந்தேதி கர்நாடகாவிற்குள் நுழைய உள்ளார். வரும் 30ந்தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள். இந்நிலையில் தனது நடைபயணத்தை பாதியில் விட்டுவிட்டு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ராகுல்காந்தி டெல்லி செல்ல விரும்பவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அவர் போட்டியிடமாட்டார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.







