ராகுல் காந்திக்கு எம்.பி.பதவி வழங்கப்பட்டதை அடுத்து வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாட்டிற்குச் செல்கிறார்.
மோடி சமூகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரது எம்பி பதவி தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. இதனால், நான்கு மாதங்களுக்கு பின்னர் நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி சென்றார்.
காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ராகுல்காந்தியை வரவேற்று முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்ததை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் எம்பிக்கள் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிட்டோருக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.
On 12-13 August, Sh. @RahulGandhi ji will be in his constituency Wayanad!
The people of Wayanad are elated that democracy has won, their voice has returned to Parliament!
Rahul ji is not just an MP but a member of their family!
— K C Venugopal (@kcvenugopalmp) August 8, 2023
இந்நிலையில் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான வயநாட்டிற்கு ஆகஸ்ட் 12-ம் தேதி இரண்டு நாள் பயணமாக செல்லவிருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ”ஜனநாயகம் வென்றது, நாடாளுமன்றத்தில் தங்களின் குரல் மீண்டும் ஒலிக்கிறது என வயநாட்டு மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ராகுல் எம்.பி. மட்டுமல்ல, வயநாட்டு மக்களின் குடும்ப உறுப்பினர்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.







