இயக்குனர் பாலா இயக்கி அருண்விஜய் நாயகனாக நடித்துவரும் ”வணங்கான்” படத்தில் மிஷ்கின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா ’எதற்கும் துணிந்தவன்’ படத்திற்குப் பின் இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். நந்தா, பிதாமகன் படத்தை தொடர்ந்து இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்தது. படத்தின் படப்பிடிப்பும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத துவக்கத்தில் கன்னியாகுமரியில் சில நாள்கள் நடைபெற்றது. ஆனால், பிரச்னைகள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனால், சூர்யா தன் அடுத்த படத்தில் நடிக்கச் சென்றார்.
ஆனால் படத்திலிருந்து விலகுவதாக சூர்யா திடீரென அறிவித்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் கருத்து வேறுபாடு எழுந்ததன் காரணமாகத்தான் சூர்யா விலகிவிட்டார் என கூறப்பட்டது. ஆனால் கதையில் ஏற்பட்ட சில மாற்றங்கள்தான் காரணம் என பாலா அறிக்கையில் வெளியிட்டு விளக்கமளித்தார். சூர்யாவிற்கு பிறகு கீர்த்தி ஷெட்டியும் விலகிவிட்டார்.
இதனையடுத்து வணங்கான் படத்தில் அருண் விஜய் கமிட்டாகி நடித்துவருகிறார். ஹீரோயினாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் நடந்துவருகிறது. மேலும், வணங்கான் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்தில் முடிய உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலாவுக்கு மிஷ்கின் நெருங்கிய நண்பர் என்பதும்; மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தை பாலாதான் தயாரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாலா-மிஷ்கின் இருவருக்குமே தனித்துவமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கும்போது இதுபோன்ற அப்டேட் படத்தின் மேல் எதிர்பார்ப்பை பலப்படுத்தியுள்ளது.




