பிரதமர் மோடியைக் கண்டு தான் பயப்படவில்லை என்றும் தம்மை யாரும் பயமுறுத்தி அடிபணிய வைக்க முடியாது என்றும் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கூறியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்.பி.ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் பல்வேறு அதிரடி விசாரணைகளை மேற்கொண்டு வரும் அமலாக்கத்துறை, நேற்று டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை அலுவலகத்தில் உள்ள யங் இந்தியன் அலுவலகத்தை மூடி சீல் வைத்தது. இந்த நடவடிக்கை நடைபெற்று முடிந்த சற்று நேரத்தில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வீடு முன்பும், காங்கிரஸ் அலுவலகம் முன்பும் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்தனர். இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடியை கண்டு தான் பயப்படவில்லை என்றும், தன்னை யாரும் பயமுறுத்தி அடிபணிய வைக்க முடியாது என்றும் தெரிவித்தார். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க தொடர்ந்து தான் பாடுபடுவேன் எனத் தெரிவித்த ராகுல்காந்தி, நாட்டில் சமூக ஒற்றுமையை பேணுவதற்காக பாடுபடுவேன் என்றும் கூறினார். இது தனது கடமை என்றும் அவர் தெரிவித்தார். உண்மையை தடுப்புவேலிகளைக் கொண்டு யாராலும் தடுக்க முடியாது எனக்கூறி, சோனியா காந்தி வீடு மற்றும் காங்கிரஸ் அலுவலகம் முன்பு தடுப்பு வேலிகள் போடப்பட்டதை ராகுல்காந்தி கண்டித்தார்.








