சென்னை ரயில் நிலையங்களில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு? நியூஸ் 7 தமிழ் களஆய்வு!

நுங்கம்பாக்கம் சுவாதி, பரங்கிமலை சத்யா , இந்திராநகர் பிரித்தி, சைதாப்பேட்டை ராஜேஸ்வரி. இவர்கள் அனைவரும் சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் கொடூரமாக கொலை செய்யபட்டவர்கள். ஆண்டுகள் கடந்தாலும் ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து பெண்கள் கொலை…

நுங்கம்பாக்கம் சுவாதி, பரங்கிமலை சத்யா , இந்திராநகர் பிரித்தி, சைதாப்பேட்டை ராஜேஸ்வரி. இவர்கள் அனைவரும் சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் கொடூரமாக கொலை செய்யபட்டவர்கள். ஆண்டுகள் கடந்தாலும் ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து பெண்கள் கொலை செய்யப்படுவது தொடர்ந்த வண்ணம் உள்ளன. புறநகர் ரயில் நிலையங்களில் கேள்விக்குறியாகியுள்ள பாதுகாப்பு குறித்து நமது முதன்மை செய்தியாளர் ஷெர்லி நடத்திய கள ஆய்வை பார்க்கலாம்…

சென்னைவாசிகள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பொதுப்போக்குவரத்து புறநகர் ரயில்கள். ஆனால் அவற்றில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 35 வயது பெண்ணை ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ராஜேஸ்வரி மயங்கி சரிந்தார். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மிகவும் பரபரப்பான சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, தற்போது இந்த ரயில் நிலையத்திற்கு வருபவர்களுக்கு ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து இங்கு கூடுதலாக காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது, இந்த சம்பவத்திற்கு முன் அந்த ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகம் இல்லை எனவும், ஒன்று அல்லது இரண்டு போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் எனவும் இந்த சம்பவம் ரயில் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது எனவும் கூறினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு ரயில் நிலையம் வரை போலீஸார் அதிகம் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை எனவும், காவலுக்கு போதிய போலீஸார் இல்லை எனவும் நியூஸ்7 தமிழ் சார்பாக நடத்திய கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதேபோல் வெளிச்சமே இல்லாமல் எந்த நேரமும் இரவு போல் காட்சியளிக்கிறது சென்னை இந்திரா நகர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக பெண் ஒருவரிடம் இருந்து செல்போன் பறிக்க முயன்றபோது அந்த பெண்  கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சென்னை வேளச்சேரி முதல் பீச் ரயில் நிலையம் வரை பாதுகாப்புக்கு கூடுதலாக காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நியூஸ்7 தமிழ் சார்பாக செய்த கள ஆய்வில் சென்னை வேளச்சேரி முதல் பீச் ரயில் நிலையம் வரை இடையில் சில ரயில் நிலையங்களில் ஒரு போலீஸார் கூட பணியில் இல்லாதது தெரிய வந்தது. குறிப்பாக சம்பவம் நடந்த இந்திரா நகர் பகுதியில் கூட ஒரே ஒரு காவல் அதிகாரி மட்டுமே இருப்பது தெரியவந்தது.

சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் போதிய கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் போலீசார் பணியில் இருந்த போதிலும், அருகில் இருக்கும் அரசு மதுபான கடைகளில் மது அருந்தி விட்டு வருபவர்கள் ரயில் நிலையத்தின் வாசல்களில் படுத்துக் கொள்கின்றனர். குறிப்பாக இரவிலும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறுகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

ரயில் பயணங்கள் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ளதா என்று நியூஸ்7 தமிழ் சார்பாக நடத்திய இந்த கள ஆய்வில் ஏமாற்றமே மிஞ்சியது. மக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய ரயில் போக்குவரத்தில் அவர்கள் எதிர்பார்க்கும் பாதுகாப்பை செய்து கொடுப்பது அரசின் கடமையாகும். சென்னையில் 9 ரயில் நிலையங்களில் மட்டுமே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று ரயில் நிலையங்களில் தொடரும் வன்முறைகள், கொலைகள், கொள்ளைகள் போன்ற சம்பவங்களை தடுப்பதற்கு ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களும், அதிக அளவில் போலீஸாரும் பணியில் ஈடுபடுத்துவது மட்டுமே வழிவகுக்கும். ஆடம்பர பயணத்தை தாண்டி, பொதுமக்களின் கோரிக்கை அவர்களுக்கு அரசு அளிக்கும் பாதுகாப்பாக மட்டுமே உள்ளது. அவற்றை உறுதிபடுத்துவது அரசின் கடமையாகும்.

இதுகுறித்து நியூஸ்7 தமிழ் சார்பாக முதன்மை செய்தியாளர் ஷெர்லி நடத்திய கள ஆய்வு காணொளியை காண…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.