20 வருடங்களில் 25 படங்களையே நடித்திருப்பதற்கு காரணம் என்னவென்று 42 வது பிறந்தநாள் விழாவில் நடிகர் ஜெயம்ரவி விளக்கமளித்துள்ளார்.
ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரவி. 2003 ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பிறகு ஜெயம்ரவியாக தமிழ் சினிமாவில் வெற்றி திரைப்படங்களை கொடுத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் ஜெயம்ரவி இன்று தனது 42 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அதுமட்டுமின்றி தனது சினிமா வாழ்க்கையில் 20 வது ஆண்டை நிறைவு செய்கிறார். பிறந்த நாள் விழா மற்றும் சினிமாவில் 20 வருடங்கள் நிறைவு செய்வதையொட்டி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு அவரது குடும்பத்தினரோடு இந்த விழாவை கொண்டாடினார்.

அப்போது பேசிய அவர், முதல் முறையாக என்னுடைய பிறந்தநாள் விழாவில் செய்தியாளர்களுடன் ஒரு சந்திப்பு கிடைத்தது நிறைவாக உள்ளது. உருப்படியான பிறந்தநாள் விழாவாக இதை பார்க்கிறேன் என்றார். என்னுடைய சினிமா வாழ்க்கையில் 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனால் 25 படம் தான் செய்துள்ளேன். எனக்கு பிறகு சினிமாவிற்கு வந்தவர்கள் 40,45 படங்கள் செய்துள்ளனர். ஏன் அந்த எண்ணிக்கை குறைவு என நினைத்து பார்த்தேன்.
அப்போது தான் தோன்றியது. ”Quantity முக்கியம் இல்லை quality தான் முக்கியம்.” எப்பொழுதும் quality ஆக படம் பண்ண வேண்டும் என்பதால் தான் இவ்வளவு குறைவான படங்கள் செய்துள்ளேன் என நினைக்கிறேன் என்றார். சினிமாவில் நான் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு என் அண்ணன் தான் காரணம் என கூறிய ஜெயம்ரவி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்றியை தெரிவித்து மகிழ்சியை தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: