ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஹைதரபாத் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவராக ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, கேப்டன் ஷிகர் தவான் மட்டும், அணிக்காக நின்று விளையாடினார்.
இதையும் படியுங்கள் : கடைசி ஓவரில் 5 சிக்சர்… ரிங்கு சிங் அதிரடி… குஜராத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி த்ரில் வெற்றி
முதல் ஓவரிலிருந்து 20வது ஓவர் வரை களத்தில் இருந்த அவர், 66 பந்துகளில் 99 ரன்கள் விளாசினார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. ஹைதரபாத் அணி தரப்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி, 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 74 ரன்கள் விளாசினார். இவ்வாறு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதரபாத் அணி, இந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.








