வீட்டுக் கடன் வழக்கு குறித்து புதுக்கோட்டை பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை, உசிலைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பாப்பா
கிறிஸ்மா. இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “நான் எனது பாட்டியின் கவனிப்பில் வளர்ந்து வருகிறேன். எனது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார். எனது தாய் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தின் ஜூனியர் அசிஸ்டெண்டாக பணிபுரிந்து வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், எனது தாய் கிறிஸ்தியா, புதுக்கோட்டையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வீடு கட்ட கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்தார். ரூ.11 லட்சம் வீடு கட்டுவதற்கு வங்கி கடன் ஒப்புதல் வழங்கப்பட்டது. இருவருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக ஜனவரி மாதம் 2021 ஆம் ஆண்டு முதல் தவணையாக ரூ. 7 லட்சம் கடன் தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில், எனது தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மே 2021ஆம் ஆண்டு
இறந்துவிட்டார். வீடு கட்டுவதற்கு கடன் பெற்றபொழுது கடன் தொகைக்கான காப்பீடு போடப்பட்டது. அதற்காக எனது தாய் ரூ. 60 ஆயிரம் காப்பீடு தொகை செலுத்தினார்.
எனவே, காப்பீடு அடிப்படையில் எனது தாய் பெற்ற கடன் தொகையை காப்பீடு தொகையில் பெற்று கொண்டு முடித்து வைக்க வேண்டும் என வங்கியிடம் மனு செய்தோம்.
ஆனால், வங்கி தரப்பில் எனது தாய் செலுத்திய காப்பீடு தொகை கணினியில்
பதிவாகவில்லை. வேறு ஒரு நபரின் பெயரில் காப்பீடு பணம் செலுத்தப்பட் டு உள்ளது. எனவே, உங்களது தாயின் காப்பீடு செல்லத்தக்கதல்ல. கடன் பெற்ற தொகையை செலுத்தாததால் எனது தாய் பெயரில் உள்ள நிலத்தை வங்கி சார்பில் விற்பனை செய்வதற்கு ஏல அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இந்த ஏல அறிவிப்பு நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.” என மனுவில்
கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கெளரி முன்பு விசாரணைக்கு
வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், காப்பீடு எடுத்தவர், காப்பீடு வழங்கியவர் இருவருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. வீடு கட்ட கடன் பெற்றவர் அதே வங்கியில் காப்பீடு செய்து உள்ளார். காப்பீடு தொகையும் செலுத்தி உள்ளார். இந்த நிலையில், காப்பீடு எடுத்தவர் மரணம் அடைந்துள்ளார்.
எனவே, காப்பீடு எடுத்தவரின் குடும்பத்திற்கு உரிய காப்பீடு தொகை வழங்க
வேண்டும். கடன் பெற்ற தொகையை காப்பீடு தொகையில் கழிக்க வேண்டும். காப்பீடு செய்த பிறகு காப்பீடு விவரங்களை காப்பீடு நிறுவனத்தின் கணினி ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு தொகை
வழங்காமல் இருப்பது ஏற்புடையது அல்ல. எனவே, வீடு ஏல அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இதுகுறித்து புதுக்கோட்டை பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
-ம.பவித்ரா