புதுச்சேரியில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அடங்கிய பட்டியலை, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம், முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று முதல்வராக ரங்கசாமி கடந்த மே 7ம் தேதி பதவியேற்றார். இதனைத்தொடர்த்து முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அமைச்சர்கள் பதவி ஏற்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அமைச்சர்களாக லஷ்மி நாராயணன், ஜெயக்குமார், சந்திரபிரியங்காவும், பாஜக சார்பில் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணகுமார் ஆகியோர் கடந்த ஜீன் மாதம் 27ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர், இருப்பினும் அவர்களுக்கான இலாகாக்கள் இதுவரை ஒதுக்கப்படவில்லை இதனால் துறை சார்ந்த பணிகளில் ஈடுபடமுடியாமல் அமைச்சர்கள் இருந்து வந்தனர், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவது தொடர்பாக என்.ஆர் காங்கிரஸ் பாஜக இடையே இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை, முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட உள்ள இலாகாக்கள் குறித்த பட்டியலை வழங்கினார். மேலும் பட்டியலுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பின்பு அமைச்சர்களுக்கு எந்தெந்த இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரியவரும்.







