பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா : மக்களவை மாலை 5 மணி வரை ஒத்திவைப்பு…!

பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மக்களவையில் இன்று தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார்.

இம்மசோதாவின் படி வினாத்தாள் கசிவு வழக்குகள் மீதான விசாரணைகள் இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ₹50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

இதனை தொடர்ந்து மசோதா மீதான விவாதம் மாலை 5 மணிக்குத் தொடங்கும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்ததைத் தொடர்ந்து, அவை மாலை 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாலை 5 மணிக்குள் மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும் என்றும், அதன்பிறகு விவாதத்தை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்த மசோதா மீது 91 திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் பொதுத் தேர்வுகள் மசோதா’ (Public Examinations Bill) மீதான விரிவான விவாதத்திற்கு ஆறு மணி நேரத்தை ஒதுக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.