மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :
கடந்த சில நாட்களாக, மணிப்பூரில் குக்கி மற்றும் மைத்தேயி என்ற இரு சமூகங்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு தீ வைப்பு சம்பவங்களும், கலவரங்களும் நடைபெற்று வருகின்றன. இந்தக் கலவரம் மியான்மர் எல்லை நகரமான மோரேவுக்கும் பரவியுள்ளது. இந்தப் பகுதியில்தான் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த மோதலால் மணிப்பூர் தலைநகர் இம்ப்பால், மோரே ஆகிய பகுதிகளில் தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என்று அங்குள்ள தமிழ்ச் சங்கத்தினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தில், தமிழர்கள் படும் அல்லலைப் போக்குவதற்கும், அவர்களை மீட்பதற்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. மணிப்பூரில் அவதியுறும் தமிழர்கள் குறித்த தகவல் எதுவும் இதுவரை முதலமைச்சருக்கு அதிகாரிகள் தெரிவிக்கவில்லையா? அல்லது மணிப்பூர் வாழ் தமிழர்கள் நம்முடையவர்கள் அல்ல என்று நினைத்துவிட்டாரா?
இதையும் படியுங்கள் : டெல்லியில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய விவசாயிகள்…!
கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில், தங்கள் குடும்ப மக்களின் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த அரசு, மணிப்பூர் வாழ் தமிழக மக்களைப் பற்றி ஏன் கவலைப்படப் போகிறார்கள் என்று நடுநிலையாளர்கள் அங்கலாய்க்கிறார்கள். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும், மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் நம் சகோதர தமிழர்களின் உறவுகளைக் காக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.







