“நேஷ்னல் ஹெரால்டு காங்கிரஸின் சொத்து” – கே.எஸ்.அழகிரி

“நேஷ்னல் ஹெரால்டு காங்கிரஸின் சொத்து; அதை ஆர்.எஸ்.எஸ், பாஜக பெயரில் எழுதித் தர முடியாது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் தொடர்ந்து மூன்றாவது நாளாக…

“நேஷ்னல் ஹெரால்டு காங்கிரஸின் சொத்து; அதை ஆர்.எஸ்.எஸ், பாஜக பெயரில் எழுதித் தர முடியாது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதனை கண்டித்து கே.எஸ்.அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தாம்பரம் அருகேயுள்ள சின்னமலையில்
நடைபெற்றது.

இதில் கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டாராவ், செல்வப்பெருந்தகை, ஈ.வி.எஸ் இளங்கோவன், தங்கபாலு மற்றும் 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, நாங்கள் ஆளுநர் மாளிகை கேட் வரை மட்டும் செல்கிறோம், காவல்துறையினர் எங்களை தடுக்க வேண்டாம், ஆளுநர் பதவி மீது மரியாதை, விருப்பம் எங்களுக்கு உண்டு. நாங்கள் எங்கள் எதிர்ப்பை மட்டுமே பதிவு செய்கிறோம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,

“நேஷ்னல் ஹெரால்டு என்பது காங்கிரஸ் கட்சியின் சொத்து, அதை ஆர்.எஸ்.எஸ், பாஜக பெயரில் எழுதித் தர முடியாது. அறக்கட்டளை விதிகளின்படியே நேசனல் ஹெரால்ட் பங்குகளை கட்சிப் பெயரில் இல்லாமல், கட்சியினர் பெயரில் வைத்துள்ளோம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.

காங்கிரஸ் நாத்திக கட்சியோ, இந்துமத எதிர்ப்பு கட்சியோ அல்ல, சாதி, மத வேறுபாடுகளை எதிர்க்கும் கட்சி. இந்திய எல்லைக்குள் வாழும் அனைவரும் இந்தியரே என்றார் காந்தி. வேறொரு மதம் குறித்து கருத்து சொல்லக் கூடாது , அந்த மதத்துடன் சண்டை போடுவது
தவறு.

உத்தர பிரதேசத்தில் போராட்டம் நடத்திய இசுலாமியர்களின் வீடுகளை பொக்லைன், ஜேசிபி வைத்து இடித்துள்ளனர். அது ஆக்கிரமிப்பு வீடு என பல வருடமாக ஆட்சி நடத்திய பாஜக அரசுக்கு இப்போதுதான் தெரியுமா..?” என ஆவேசமாக கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மேகதாது அணைக்கு மத்திய நீர்வளத்துறை வரைவுத் திட்ட அனுமதி கொடுத்ததே தவறு. மேகதாது அணையால் காவிரி டெல்டா பாலைவனமாகப்போகிறது. கொள்கைதான் வெல்லும், பாஜகவின் சந்தர்பவாதம் ஒருபோதும் வெற்றி பெறாது.” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.