புரோ கபடி லீக் தொடர் 9வது சீசனின் முதல் போட்டியில் யூ மும்பா அணியை வீழ்த்தி நடப்புச் சாம்பியனான தபாங் டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் இன்று தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் தபாங் டெல்லி மற்றும் யூ மும்பா அணிகள் மோதின. பெங்களூரிலுள்ள கண்டிவீரா ஸ்டேடியத்தில், இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியில், தொடக்கம் முதலே டெல்லி அணி புள்ளிகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியது. தபாங் டெல்லியின் நட்சத்திர வீரரும் ரெய்டருமான நவீன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக புள்ளிகளைக் குவித்தார்.
யூ மும்பா அணி ரெய்டர்களும் டெல்லி அணி வீரர்களிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். இதனால் தொடக்கம் முதலே இரு அணிகளின் புள்ளிகளுக்கு இடையில் பெரிய இடைவெளி ஏற்பட்டு, டெல்லி அணி முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் முடிவில் 41- 27 என்ற கணக்கில் யூ மும்பா அணியை வீழ்த்தி தபாங் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் டெல்லி அணி இந்த சீசனில் தனது வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளது. தபாங் டெல்லி அணி கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.








