பிரியங்கா சோப்ரா… இந்திய திரைவானில் ஜொலிக்கும் முன்னணி நட்சத்திரம். அசராத முயற்சியால் அழகி பட்டம் வென்ற இவருக்கு இன்று பிறந்தநாள்….
2000-ம் ஆண்டில் எப்போதும் போல் உலக அழகிப்போட்டி நடந்து கொண்டிருந்து. ஆனால் போட்டியின் இறுதியில், அழகின் இலக்கணத்தை மாற்றும் ஒரு பேரழகிக்கு உலக அழகி பட்டம் கொடுக்கப்படும் என்று யாரும் நினைத்துகூட பார்க்கவில்லை. அவர் தான் பிரியங்கா சோப்ரா.
இளம் வயதில் தனது நிறம் தொடர்பாக பல கேலிகளையும் கிண்டல்களையும் சந்தித்தவர். இதுகுறித்து அவரே பல இடங்களில் கூறியிருக்கிறார். இதனால் தனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார். ஆனால், கேலி, கிண்டல்களை புறந்தள்ளிய பிரியங்கா சோப்ரா, தனது விடாமுயற்சியாலும் அசராத தன்னம்பிக்கையாலும், உலக அழகிப் பட்டத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் அசோக் சோப்ரா, மது சோப்ரா தம்பதியின் மூத்த மகளாக 1982 ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். திறமையானவர்களுக்கு வாய்ப்பளிப்பதில் தமிழ்நாடு எப்போதும் எதிலும் முதலிடம்தான். அது உலக அழகியான ஐஸ்வர்யா ராய் விஷயத்திலும் சரி, பிரியங்கா சோப்ரா விஷயத்திலும் சரி.
தமிழ் சினிமாதான் அவர்களுக்கு முதல் வாய்ப்பை அளித்தது. அந்த வகையில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக அவர் “தமிழன்” படத்தில் நடித்தார். சமீபத்தில் அவர் எழுதிய ‘ Unfinished’ என்ற புத்தகத்தில், இதுதொடர்பாக நடிகர் விஜய்யின் நற்பண்புகளைப் பற்றி எழுதியிருக்கிறார்.
இவர் 2003 ஆம் ஆண்டு The Hero: Love Story of a Spy என்ற படத்தின் மூலம் இந்தி திரை உலகிற்கு அறிமுகமானவர். 50 திரைப்படங்களுக்கு மேலாக பிரியங்கா சோப்ரா நடித்திருக்கிறார். பல படங்களில் நடித்திருந்தாலும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது இவர் நடித்த ‘Fashion’ திரைப்படத்திற்கு 2008 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஒரு மாடல் அழகியின் வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் இது.
இவர் 5 பிலிம்பேர் விருதுகள், 4 IIFA விருதுகள் பெற்றுள்ளார். 2016-ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது அளித்து கௌரவபடுத்தியது. வாழ்நாள் முழுவதும் நிறத்தால், அழகாக இல்லை என்று ஒதுக்கப்பட்டவர், தற்போது அழகிற்கே ஒரு இலக்கணமாக திகழ்கிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பர உலகிலும் ஜொலித்து வருகிறார்.
பிரியங்கா சோப்ரா. பர்ஃபி, மேரி கோம், பாஜிரோ மஸ்தானி ஆகிய படங்களில் அசத்தலான நடிப்பை வெளிகாட்டியிருப்பார். இவர் பல்வேறு இந்திய மொழிப் படங்களை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான‘பர்பில் பெபுல் பிக்சர்ஸ்’ மூலம் தயாரித்திருக்கிறார். இவர் தயாரித்த மராட்டிய மொழிப் படமான ’வெண்டிலேட்டர்’ 3 தேசிய விருதுகளை வென்றிருக்கிறது. இவரது சகோதரி பரினிதி சோப்ராவும் பிரபல இந்தி நடிகை ஆவார்.
2015 ஆம் ஆண்டு ’Alex Parrish’ என்ற கதாபாத்திரத்தில் ’Quantico’குவாண்டிகோ என்ற சீரிஸில் நடித்ததை தொடர்ந்து அவர் ஹாலிவுட்டில் நடித்து வருகிறார். அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
தன்னைவிட 10 வயது குறைந்தவரை திருமணம் செய்ததால் அவர் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டாலும், தனது இயல்பான புன்னகையால் அந்த விமர்சனங்களை ஓரம் கட்டிவிட்டு தொடர்ந்து சாதித்து வருகிறார்.
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் பிரியங்கா சோப்ராவும் இடம் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.













