கேன்ஸ் திரைப்பட விழாவில் மிக உயரிய விருதான Palme d’Or, டிடேன் என்ற பிரான்ஸ் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவில் தென் கொரியாவின் பாராசைட் திரைப்படம் Palme d’or விருதை வென்றிருந்தது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், 74-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 6-ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்பட்ட நிலையில், இறுதி நாளான நேற்று விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், மிக உயரிய Palme d’or விருதை பிரான்ஸ் திரைப்படமான ’TITANE’ தட்டிச்சென்றது.
https://twitter.com/Festival_Cannes/status/1416475943804280840
படத்தின் இயக்குநரான ஜூலியா டூகோர்நா இந்த விருதைப் பெற்றுக்கொண்டார். பால்ம் டோர் விருதை வெல்லும் 2வது பெண் என்ற பெருமையை ஜூலியா பெற்றார்.
இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அமெரிக்காவின் காலேப் லாண்ட்ரி ஜோன்சுக்கு வழங்கப்பட்டது.
இதே போல், சிறந்த நடிகைக்கான விருதை நார்வே நாட்டைச் சேர்ந்த ரெனடா ரீன்ஸ்வே வென்றார்.
சிறந்த இயக்குநருக்கான விருது, ‘Annette’ படத்திற்காக லியோஸ் காரக்ஸ்க்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான விருதை ‘Drive My Car’ படத்திற்காக ஜப்பானைச் சேர்ந்த ஹாமாகுச்சி தட்டிச்சென்றார்.










