தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், தேநீர் விலை 15 ரூபாய் வரையும், காபி விலை 20 ரூபாய் வரையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் நாள்தோறும் 16.41 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்கிறது. அதேநேரம் தனியார் நிறுவனங்கள் தினமும் 1.25 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன. அதன்படி, தமிழகத்தின் தினசரி பால் தேவையில் 84 சதவீதத்தை தனியார் பால் நிறுவனங்களே பூர்த்தி செய்கின்றன. இதனால், ஆவின் பாலைவிட தனியார் நிறுவன பால் விலை அதிகமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தனியார் பால் நிறுவனங்கள் அடிக்கடி பால் விலையை உயர்த்தி வருகின்றன.
ஏற்கெனவே கடந்த பிப்ரவரி, மே மாதங்களில் தனியார் பால் மற்றும் தயிர் விலை லிட்டருக்கு ரூ. 4 வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் தற்போது 3வது முறையாக தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்ரீனிவாசாநிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 வரை உயர்த்தியுள்ளது. ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. மற்ற நிறுவனங்களும் பால் விலையை அடுத்தடுத்த நாட்களில் உயர்த்த திட்டமிட்டுள்ளன.
இந்த திடீர் விலை உயர்வு ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். தனியார் பால் விலை உயர்வால் பால் சார்ந்த தேநீர், காபி உள்ளிட்ட இதர பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








