சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியான ஃபெடரல் வங்கியில் ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கி வழக்கம்போல் இன்று செயல்பட்டு வந்தது. இன்று பிற்பகல் 2 மணியளவில் முகமூடி அணிந்துவந்த மர்ம நபர்கள் வங்கி மேலாளரை கட்டிப்போட்டு துப்பாக்கி முனையில் மிரட்டி வங்கி லாக்கரில் இருந்த நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனங்களில் சாலை மார்க்கமாக தப்பிச் சென்றுவிட்டனர்.
காவலருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொள்ளையர்கள் கொடுத்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வங்கி மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொள்ளையர்களை தேடி கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இதே வங்கியில் தற்போது வரை வேலை செய்து கொண்டிருந்த முருகன் என்ற ஊழியர் தான் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்பதை கண்டறிந்துவிட்டோம்.
வங்கியில் வேலை செய்யும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது விரைவில் கண்டறியப்படும். விசாரணையில் இருப்பதால் இதற்கு மேல் எதுவும் தெரிவிக்க இயலாது. கொள்ளையில் ஈடுபட்டவரை கண்டுபிடித்துவிட்டதால் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்பதும், குற்றவாளிகளை பிடிப்பதும் எளிமையானது தான்.
4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக தனிப்படைகள் அமைக்கப்படுவது குறித்து ஆலோசனை ஈடுபட்டு வருகிறோம். கொள்ளை போன பொருட்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது என்றார் அன்பு.
பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியில் பட்டப்பகலில் அரங்கேறியுள்ள கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, வங்கி லாக்கருக்குள் மேலாளர் சுரேஷ், ஊழியர் விஜயலட்சுமி ஆகியோர் சிக்கியுள்ளனர். அவர்களை வெளியே எடுக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர். லாக்கர் ரூமீன் சாவியை கொள்ளையர்கள் கொண்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.








