“பல்கலைக்கழகத்தின் ஆணவப்போக்கு மாணவர்களுக்கு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும்”

பல்கலைக்கழகங்கள் ஆணவப் போக்கில் நடந்து கொள்வது பட்டம் பெறும் மாணவர்கள் மனதில் பெரும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54வது பட்டமளிப்பு இன்று தமிழக…

பல்கலைக்கழகங்கள் ஆணவப் போக்கில் நடந்து கொள்வது பட்டம் பெறும் மாணவர்கள் மனதில் பெரும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54வது பட்டமளிப்பு இன்று தமிழக ஆளுநர்
ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றுள்ளார். இந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு இதுவரை இல்லாத நடைமுறையாக சிறப்பு
விருந்தினராக மத்திய அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தது சர்ச்சையை
ஏற்படுத்திய நிலையில், தங்களை ஆலோசிக்காமலே பட்டமளிப்பு விழா நடைபெறுவதாகக் கூறி உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விழாவைப் புறக்கணித்தார்.

இதுகுறித்து, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பல்கலைக்கழகங்கள் உரிய சட்டங்கள், விதிகளின் படி சுதந்திரமாக தங்கள் பணிகளை மேற்கொள்ளத் தகுந்த வழிகாட்டுதலை, தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை பல்கலைக்கழகங்களுக்கு வழங்கிட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக்களை மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராகப் பரப்புரை செய்யும் மேடைகளாகத் தமிழ்நாடு ஆளுநர் மாற்றி வருகிறார். விவாதத்திற்கு உரிய ஒரு கருத்தை ஒருவர் முன் வைத்தால் அதை மறுத்துப் பேச மற்றவர்களுக்கு வாய்ப்புத் தரவேண்டும். பட்டமளிப்பு விழாவை அத்தகைய விவாதத்திற்கு உரிய அரங்கமாக மாற்றக் கூடாது.

பல்வேறு சிக்கல்களைக் கடந்து மாணவர்களின் உழைப்பிற்குக் கிடைக்கும் அங்கீகாரம்தான் பட்டமளிப்பு விழா. அத்தகைய பட்டமளிப்பு விழா உரைகள், உற்சாகத்துடன் சமூகத்தை மேம்படுத்த தங்கள் அறிவைப் பயன்படுத்திட மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பேரறிஞர் அண்ணா அவர்கள் அண்ணமலைப்பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசும்போது “சிலந்திவலை போல் சமூகத்தில் விரிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற உங்களுக்குத் தரப்பட்ட உரிமம் தான் இந்தப் பட்டம்” என்று கூறினார். சாதி, சடங்கு உள்ளிட்ட மூடநம்பிக்கைகளில் சமூகம் சிக்கித் தவிக்கிறது. அந்தக் குப்பைகளை அகற்ற தாங்கள் பெற்ற பட்டத்தை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று அண்ணா அறிவுரை கூறினார்.

பொறுப்பு மிக்க உரைகள் அமைய வேண்டிய பட்டமளிப்பு விழாக்களைத் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் தனது சர்ச்சைக்குரிய உரைகள் மூலம் கலங்கப்படுத்தக் கூடாது. மாநில அரசின் கொள்கை நிலைப்பாட்டிற்கு நேர் எதிரான கருத்துக்களைப் பேசி, மாநில அரசுக்கு எதிரான மனநிலையை மாணவர்களிடம் உருவாக்க முயல்வது நியாயமற்ற, நேர்மையற்ற அணுகுமுறை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகம் ஆளுநர் மாளிகை சொல்வதைத் தான் செய்யமுடியும் என்று தெரிவித்ததாக உயிர்கல்வித் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. பல்கலைக்கழகம் தனது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் உரிமைகூட இல்லாத நிலை தமிழ்நாட்டில் எற்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

ஆளுநர் மாளிகை பல்கலைக்கழகங்களில் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவது எற்புடையது அன்று. மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணை வேந்தர் விழாவில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்த பின்னர், இணை வேந்தரிடம் பல்கலைக்கழக நிர்வாகம் உரிய விளக்கம் அளித்து, விழாவில் அவரைப் பங்கேற்க முயற்சி மேற்கொள்ளாமல், இணை வேந்தர் இல்லாமல் விழாவைத் தொடர்ந்து நடத்துவது தமிழ்நாடு அரசையும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் அவமதிக்கும் செயல். பல்கலைக்கழகளின் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் பல்கலைக்கழகங்களின் ஜனநாயகத்தைக் காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.