“ஒரே நாடு ஒரே உரம்” திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

“ஒரே நாடு ஒரே உரம்”  திட்டத்தை பிரதமர் மோடி இன்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். மத்திய அரசு ‘பிரதம மந்திரி இந்திய வெகுஜன உரத் திட்டம்’ -“ஒரே நாடு ஒரே உரம்”…

“ஒரே நாடு ஒரே உரம்”  திட்டத்தை பிரதமர் மோடி இன்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

மத்திய அரசு ‘பிரதம மந்திரி இந்திய வெகுஜன உரத் திட்டம்’ -“ஒரே நாடு ஒரே உரம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில், 2 நாட்கள் நடைபெறும் ‘விவசாயிகள் சம்மேளனம் 2022’ நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், “ஒரே நாடு ஒரே உரம்” என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், அனைத்து மானிய உரங்களையும் வழங்கும் நிறுவனங்கள் ‘பாரத்’ என்ற ஒரே பெயர் பொருந்திய பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துவது கட்டாயமாகும். மேலும், மானிய விலையில் வழங்கப்படும் மண் உரங்கள் – யூரியா, டி-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி), மியூரேட் ஆப் பொட்டாஷ் (எம்ஓபி) மற்றும் என்பிகே போன்றவை அனைத்தும் நாடு முழுவதும் ‘பாரத்’ என்ற ஒரே பெயர் பொருந்திய பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துவது கட்டாயமாகும்.

இந்நிகழ்ச்சியில், பிரதான் மந்திரி விவசாயிகள் நிதி திட்டத்தின் 12வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார். இதன்மூலம் 16 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு கிடைக்கும். மேலும் இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி 600 விவசாய சம்ருத்தி கேந்திராக்களையும் இன்று திறந்து வைத்தார். இந்த கிசான் சம்ருத்தி கேந்திராக்கள், ஒரே இடத்தில் விவசாயத் துறை தொடர்பான பல சேவைகளைப் பெறக்கூடிய இடமாக விளங்கும்.

மேலும் விவசாயிகளுக்கு விவசாயத் துறை தொடர்பான பொருட்களை ஒரே இடத்தில் வழங்கும் இடமாக செயல்படும். நாட்டில் உள்ள 3.3 லட்சத்திற்கும் அதிகமான உர சில்லறை விற்பனைக் கடைகளை ‘பிரதமர் விவசாய சம்ருத்தி கேந்திராக்கள்’ ஆக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் உரங்கள் பற்றிய டிஜிட்டல் வடிவ இதழான ‘இந்தியன் எட்ஜ்’ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.