முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக உட்கட்சி மோதலில் சிக்கிய தேவர் நினைவிட அறங்காவலர்: யார் இந்த காந்தி மீனாள்?

அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் அணிகளுக்கு இடையிலான மோதல் இப்போது பசும்பொன் தேவர் தங்கக் கவசம் வரை சென்றிருக்கிறது. அதில் தொடர்புடைய தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாள் யார்? அவருடைய பின்னணி என்ன? தேவரின் தங்க கவச விவகாரத்தில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பது பற்றி இனி பார்ப்போம்.

ஜெயலலிதா அளித்த தங்க கவசம்
கோப்பு படம்

தேசியத்தையும், தெய்வீகத்தையும் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ளது. தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, 2014ஆம் ஆம் ஆண்டு தேவர் சிலைக்கு 13 கிலோவில் தங்கக் கவசம் ஒன்றை அதிமுக சார்பில் வழங்கி சிறப்பித்தார். வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் இந்த தங்க கவசம் ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தியின் போது தேவருக்கு அணிவிக்கப்பட்டு பின்னர் வங்கியிலேயே பாதுகாக்கப்படும். இந்த தங்க கவசத்தை அதிமுக பொருளாளராக இருப்பவரும், தேவர் நினைவிட பொறுப்   பாளராக இருப்பவரும் கையெழுத்திட்டு பெற வேண்டும் என்பது விதி.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிமுகவில் குழப்பம்
காந்தி மீனாள், தேவர் நினைவிட அறங்காவலர்

தற்போது அதிமுக, இபிஎஸ், ஓபிஎஸ் அணி இரண்டாக பிரிவாக செயல்பட்டு வருகிறது. இதனால் தங்கக் கவசத்தை யார் பெறப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து, அதிமுக பொருளாராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் தேவர் நினைவிட பொறுப்பாளராக இருக்கும் தங்க மீனாள் நடராஜனை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதேபோல் ஓபிஎஸ் தரப்பிலும் தங்க மீனாளிடம் பேசி வந்ததாக கூறப்பட்டது. இந்த நேரத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்புகள் தங்க கவசத்தை பெற்று முயற்சித்து வருகின்றன. இதுபற்றி பேட்டி அளித்த காந்தி மீனாள், இபிஎஸ் தரப்பில் தம்மிடம் முறையிட்டுள்ளதாகவும், ஓபிஎஸ் தரப்பில் யாரும் தம்மை அணுகவில்லை என்றும் கூறினார். அதே நேரத்தில் தேவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதாலும், இரு தரப்பும் சண்டையிட்டு வருவதாலும், இரு தரப்பும் வேண்டாம் என்றும் தாமே அதனைப் பெற்று தேவருக்கு அணிவிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் காந்தி மீனாள் கூறிய பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நேரத்தில் யார் அந்த காந்தி மீனாள் என்பதைப் பார்ப்போம்.

யார் இந்த காந்தி மீனாள்?

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தந்தை உக்கிரபாண்டிய தேவரின் உடன் பிறந்த சகோதரி மீனாள். இவருடைய மகன் தங்கவேல் தேவர் (தேவருக்கு மைத்துனர் உறவுமுறை). தங்கவேல் தேவரின் மகள் காந்தி மீனாள் நடராஜன்(தற்போதைய வாரிசு). பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 1963 ஆம் ஆண்டு மறைந்தவுடன் காந்தி மீனாளின் தந்தை தங்கவேல் தேவர் பசும்பொன்னில் தேவருக்கு நினைவிடம் அமைத்தார். அன்றிலிருந்து 1973 ஆம் ஆண்டு வரை தங்கவேல் தேவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தேவர் நினைவாலயத்தை பராமரித்தும், பாதுகாத்தும் வந்தனர். 1973 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவரின் மைத்துனரான தங்கவேல் தேவர் காலமானார். அவரது மறைவுக்கு பின்னர் தங்கவேல் தேவர் மகள் காந்தி மீனாள் நடராஜன் (தேவரின் மருமகள்) மற்றும் அவரது உறவினர்கள் தற்போது வரை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தை பாதுகாத்து
வருகின்றனர் .

தேவர் ஜெயந்திக்கு தயாராகும் பசும்பொன்

வரும் 30ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று தேவர் ஜெயந்தியில் பங்கேற்க உள்ளார். அதே போல் அதிமுக தரப்பில் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரும், பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளனர். இதற்காக பசும்பொன்னில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தேவருக்கு தங்க கவசம் அணிவிக்கப் போவது யார்?

அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் அணிகளுக்கு இடையே தங்கக் கவசத்தை பெறுவதற்கு கடும் போட்டி எழுந்துள்ள சூழலில் தேவர் ஜெயந்திக்கு, தங்க கவசத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பது தொடர்பாக வங்கி நிர்வாகமும் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக இதேபோல் பிளவுபட்டிருந்த போது, மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் தங்கக் கவசம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மூலமே தேவருக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டது.

அதேபோல் இந்த ஆண்டும் அதிமுகவின் பொருளாளர் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஆட்சேபனையில்லா சான்றிதழ் பெற்று, தங்க கவசம் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர்கள் மூலமாகவே தங்க கவசம் தேவருக்கு அணிவிக்கப்பட்டு வங்கியிடம் திருப்பி ஒப்படைக்கப் படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவர் ஜெயந்திக்கு இன்னும் 10 நாட்களுக்கு மேல் இருப்பதால், இதில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்கிறதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

– மதுரை ஹரி, பரமக்குடி சபரிநாதன் மற்றும் ஜெயகார்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்!

Gayathri Venkatesan

வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்குத் தடுப்பூசி கட்டாயம்: சத்யபிரதா சாகு

Halley Karthik

50,000க்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை

G SaravanaKumar