ரோஜ்கர் மேளா திட்டத்தின் மூலம் 70,126 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக வழங்கினார்.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கும் திட்டமான ‘ரோஜ்கர் மேளா’ வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் தொடக்கத்தின் போது 75,000 பேருக்கு மத்திய அரசின் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் ஆகியவற்றில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இத்திட்டத்தின் கீழ் இன்று காணொலி நிகழ்ச்சி மூலமாக 70,126 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
மேலும் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் இந்த வேளையில், அரசுப்பணியில் சேருபவர்களுக்கு இது முக்கியமான காலகட்டம். இப்போது புதிதாக நியமிக்கப்படுபவர்கள் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் முயற்சியில் இருப்பார்கள். இன்று தனியார் மற்றும் பொதுத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் ஆதரவால் இளைஞர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.” இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
ரோஜ்கர் மேளாவில் இதுவரை 3,58,000 பணி நியமன ஆணைகள் வழங்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







